மக்களவை முன்னாள் தலைவர் உயிரோடு இருக்கும்போதே இரங்கல் வெளியிட்ட சசி தரூர்: பாஜக தலைவர் தெளிவுபடுத்தியதால் ட்வீட் நீக்கம்

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் | கோப்புப்படம்
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் | கோப்புப்படம்
Updated on
2 min read

மக்களவை முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜன் காலமாகிவிட்டார் என்ற வதந்தியை நம்பி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ட்விட்டரில் இரங்கல் செய்தி பதிவிட்டார். ஆனால், சுமித்ரா மகாஜன் நலமுடன் இருப்பதாக பாஜக தலைவர்கள் கூறியதைத் தொடர்ந்து சசி தரூர் தனது ட்வீட்டை நீக்கினார்.

மக்களவை முன்னாள் தலைவராக 2014 முதல் 2019-ம் ஆண்டுவரை இருந்தவர் சுமித்ரா மகாஜன். இவர் கரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தி நேற்று சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. பலரும் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் இரங்கல் தெரிவிக்கத் தொடங்கினர்.

மக்களவை முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜன்.
மக்களவை முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜன்.

அந்தச் செய்தியை உண்மை என்று நம்பி, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் சுமித்ரா மகாஜன் மறைவுக்கு இரங்கல் பதிவு வெளியிட்டார். இது தொடர்பாக சசி தரூர் ட்விட்டரில், “முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மரணம் அடைந்தார் என்ற செய்தியைக் கேட்டு வருத்தம் அடைகிறேன்.

மாஸ்கோவில் பிரிக்ஸ் நிகழ்ச்சியில் நாடாளுமன்றப் பிரதிநிதி குழுவை வழிநடத்தும்படி அவரும், மறைந்த சுஷ்மா சுவராஜும் என்னிடம் சொன்னது உள்பட அவருடனான பல நேர்மறையான தொடர்புகனை நான் நினைவுகூர்கிறேன். அவரது குடும்பத்துக்கு, பிரார்த்தனைக்கும் எனது இரங்கல். ஓம் சாந்தி” என்று பதிவு செய்து இருந்தார்.

சசி தரூரின் ட்வீட்டைப் பார்த்த பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா, சுமித்ரா மகாஜன் நலமாக இருக்கிறார் எனத் தெளிவுபடுத்தினார். ட்விட்டரில், “சுமித்ரா மகாஜன் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார். கடவுள் அவரை நீண்ட ஆயுளுடன் வாழ ஆசிர்வதிப்பாராக” என்று கைலாஷ் விஜய் வர்க்கியா பதிவு செய்தார்.

இதையடுத்து சசி தரூர் ட்வீட்டில் கைலாஷ் விஜய் வர்க்கியாவுக்கு நன்றி தெரிவித்தார். அதில், “ நன்றிகள் கைலாஷ் விஜய வர்க்கியா. நான் என்னுடைய ட்வீட்டை டெலீட் செய்துவிட்டேன். இதுபோன்ற தீய செய்திகளைக் கண்டுபிடித்துப் பரப்புவதற்கு மக்களைத் தூண்டுவது எது என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. சுமித்ரா ஜியின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட வாழ்வுக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்தார்.

அதன்பின் மற்றொரு ட்வீட்டில் சசி தரூர், “நான் இப்போது நிம்மதியாக இருக்கறேன். நான் நம்பகமான இடத்திலிருந்துதான் இந்தத் தகவலைப் பெற்றேன். நான் பதிவிட்ட செய்தியைத் திரும்பப் பெறுவதில் மகிழ்ச்சிதான். இருந்தாலும் இதுபோன்ற செய்திகளை யார் பதிவிடுவார்கள் என்பது வியப்பாக இருக்கறது” எனத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சுமித்ரா மகாஜன் மகன் மந்தர் ட்விட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், “என்னுடைய தாயார் சுமித்ரா மகாஜன் நலமுடன் உள்ளார். அவர் பற்றி பரப்பி விடப்படும் தவறான செய்தியை யாரும் நம்பவேண்டாம். அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் வந்துள்ளது. நான் இன்று மாலை சந்தித்தேன். நலமுடன் உள்ளார்” எனத் தெரிவித்தார்.

சுமித்ரா மகாஜன் லேசான காய்ச்சலுடன் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தியதில் நெகட்டிவ் வந்தது. ஆனால், அதற்குள் சுமித்ரா மகாஜன் கரோனா தொற்றில் உயிரிழந்துவிட்டதாக யாரோ கதை கட்டிவிட்டார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in