

மேற்குவங்கத்தில் 6 கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தேர்தல் பேரணி, வாகன ஊர்வலம், பாத யாத்திரை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
பொதுக்கூட்டம் நடத்தினால் 500 பேருக்கு மேல் வரக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதி்த்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளன, இன்னும் 2 கட்டத் தேர்தல் வரும் 26 மற்றும் 29ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. தேர்தல் கூட்டங்களை நடத்தத் தடைவிதியுங்கள், மீதமுள்ள தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்துங்கள் என திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளவில்லை.
மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார், மம்தாவும் தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார். காணொலி மூலமே பிரச்சாரம் செய்யப்போவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்து நடைபெறும் இரு கட்டத் தேர்தல்களிலும் மாநிலத்தில் தேர்தல்பேரணிகள், வாகன ஊர்வலம், நடைபயணம் போன்றவற்றை நடத்த தேர்தல் ஆணையம் நேற்று தடைவிதித்து. மேலும் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு 500 பேருக்கு மேல்வரக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு நேற்று இரவு 7மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் “ மாநிலத்தில் உள்ள பல கட்சிகள், வேட்பாளர்கள் இன்னும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்பதை தேர்தல் ஆணையம்அறிகிறது.
ஆதலால், பிரிவு 324ன் கீழ் தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது.இதன்படி, மாநிலத்தில் எந்தகட்சியும் அடுத்துவரும் 2 கட்டத் தேர்தலுக்கு வாகன ஊர்வலம், பாதயாத்திரை, நடைபயணம், சைக்கிள், பைக் பேரணி ஏதும் நடத்தக்கூடாது. ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அது ரத்து செய்யப்படும். தேர்தல் பொதுக்கூட்டங்களில் 500 பேருக்கு மேல் வரக்கூடாது. சமூக விலகலைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மக்கள் கூடுவதைத் தவிர்க்க இரவு 7 மணி முதல் காலை 10 மணிவரை பிரச்சாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது. தேர்தலுக்கு 48மணிநேரத்துக்கு முன்பாகத்தான் பிரச்சாரம் நிறுத்தப்படம், அதை 72 மணிநேரமாக தேர்த்ல ஆணையம் நீட்டித்துள்ளது. இதையடுத்து, ஏப்ரல் 26ம் தேதியோடு தேர்தல் பிரச்சாரம் மே.வங்கத்தில் முடிகிறது.