

நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக ஸ்டெர்லைட் ஆலையை நிபந்தனையுடன் திறக்க அனுமதியளிக்கப்படும் என மத்திய அரசு தரப்பில்உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்று தள்ளி வைத்துள்ளனர்.
இந்தியாவில் கரோனா 2-வது அலை உச்சத்தை அடைந்துள்ளது. தினசரி பாதிப்பு 3.14 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல கரோனாமருத்துவ சிகிச்சைக்கான ஆக்ஸிஜன் தேவைக்கும் இந்திய அளவில்பற்றாக்குறை நிலவி வருகிறது.
வேதாந்தா நிறுவனம் மனு
இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலமனுவில், ‘‘தற்போது நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைப் போக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கலனைத் திறக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரியிருந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கரோனா தாக்கம் குறித்தும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து நேற்று விசாரணை மேற்கொண்டது.
அப்போது வேதாந்தா நிறுவனம்தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, ‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி கூடம் மூலமாக பிராணவாயுவை தயாரித்து இலவசமாக வழங்க தயாராக உள்ளோம்’’ என்றார்.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘தற்போதைய இக்கட்டான சூழலில் நாட்டில்ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசுக்கு தற்போது ஆக்ஸிஜன் தேவை. அதை யார்எந்த வழியில் உற்பத்தி செய்து கொடுத்தாலும் அதை வாங்க மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே அந்த வகையில் மருத்துவ அவசரத் தேவைக்காக வேதாந்தா நிறுவனம் தனது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூலமாக ஆக்ஸிஜன் தயாரிப்பதாக இருந்தால், ஆக்ஸிஜனை மட்டும் உற்பத்தி செய்து வழங்க நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படும்’’ என்றார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, ‘‘அந்த அனுமதியை இன்றே வழங்கினால் இயந்திரங்களின் பராமரிப்பு பணியை மேற்கொண்டு 5 அல்லது 6 நாட்களில் ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்கி விடலாம்’’ என்றார்.
ஆலையின் மீது நம்பிக்கை இல்லை
ஆனால் வேதாந்தா மற்றும் மத்திய அரசின் வாதத்துக்கு தமிழகஅரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன் கடும் எதிர்ப்பு தெரிவித்து மனுவையும் தாக்கல் செய்தார். அவர் தனதுவாதத்தில், ‘‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீது தமிழக அரசுக்கோஅல்லது அப்பகுதி மக்களுக்கோ எந்த நம்பிக்கையும் இல்லை. ஏனெனில் இந்த நிறுவனத்தினர் கடந்த காலங்களில் இப்படி பலமுறை குறுக்கு வழியில் அனுமதி பெற்று ஆலையை இயக்கி வந்துள்ளனர். இப்போது ஆக்ஸிஜன் தயாரிக்கிறோம் அனுமதி வழங்குங்கள் எனக் கூறுவர். பின்னர் படிப்படியாக ஆலையின் ஒவ்வொரு பகுதியாகமீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்து விடுவார்கள். பின்னர் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றமே அனுமதியளித்து விட்டது என்பார்கள். ஏற்கெனவே பலமுறை விதிமீறல்களில் ஈடுபட்டதால் தான் அந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. எனவே எந்த வகையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கக் கூடாது’’ என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘தற்போது நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதால் வேதாந்தா நிறுவனத்தின் மனு தொடர்பாக நாளை (இன்று) விரிவாக வாதங்களை கேட்டு பின்னர் முடிவெடுக்கலாம். அப்போது தமிழக அரசு தனது நிலைப்பாட்டை விரிவாக எடுத்துரைக்கலாம்’’ எனக் கூறி வழக்கு விசாரணையை இன்று (ஏப்.23) தள்ளிவைத்துள்ளனர்.