

தமிழகத்தின் வெள்ள பாதிப்பிற்கு நிவாரணப் பணிகளுக்காக டெல்லி தமிழ் சங்கம் ரூபாய் 11 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.
வரலாறு காணாத பெரும் மழையாலும் வெள்ளத்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் தமிழக மக்களுக்கு உதவுவது குறித்து டெல்லித் தமிழ்ச் சங்கம் அவசர செயற்குழுக் கூட்டத்தை கூட்டியது.
இதன்படி, உடனடியாக தமிழ்ச் சங்கம் தனது நிதியிலிருந்து ரூபாய் 11 லட்சம் முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குகிறது. இதுவன்றி, தமிழ்ச் சங்கத்தின் தலைவரான வி.பாலசுப்ரமணியன் ரூபாய் ஒரு லட்சத்தை வெள்ள நிவாரண நிதியை தனியாக வழங்குகிறார்.
டெல்லியிலுள்ள பல அமைப்புகளிடமும், டெல்லி வாழ் தமிழர்கள் மற்றும் ஏனையோரிடமும் காசோலையாக நிதி திரட்டப்பட்டு முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்காக வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் டெல்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் என். கண்ணன் மற்றும் அதன் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.