

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 1 கோடி ரூபாய் கேட்டு தனக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக பிஹார் மாநில சுயேச்சை பெண் எம்எல்ஏ போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மையில் பிஹார் சட்டப் பேரவைக்கு நடந்த பொதுத் தேர்தலில், போச்சா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சரும் ஒன்பது முறை எம்எல்ஏ பதவி வகித்தவருமான ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் ராமாய் ராமை, சுயேச்சை பெண் வேட்பாளர் பேபி குமாரி என்பவர் வீழ்த்தி வெற்றிப் பெற்றார்.
இதனால் அம்மாநில அரசியலில் பேபி குமாரியின் பெயர் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் அடுத்த பரபரப்பாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ரூ. 1 கோடி பணம் கேட்டு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து மிதன்புரா போலீஸார் நிலையத்தில் பேபி குமாரி நேற்று புகார் அளித்தார். அதில் ‘‘மாவோயிஸ்ட் தீவிரவாதிகளிடம் இருந்து எனது செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் தகவல் வந்தது. அதில் ரூ. 1 கோடி தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது. எனவே, இந்த மிரட்டல் தொடர்பாக போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.