Published : 22 Apr 2021 06:54 PM
Last Updated : 22 Apr 2021 06:54 PM

ஆக்சிஜன் விநியோகம்: பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் ஆக்சிஜன் விநியோகம் குறித்து ஆய்வு செய்வதற்கும், அது எளிதாக கிடைப்பதை ஊக்குவிப்பதற்குமான உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக கடந்து சில வாரங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து அதிகாரிகள் அவருக்கு எடுத்துரைத்தனர்.

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்தல், விநியோக வேகத்தை கூட்டுதல், சுகாதார மையங்களுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கு புதுமையான வழிகளை கையாளுதல் ஆகிய பல்வேறு முனைகளில் துரிதமாக பணியாற்ற வேண்டிய தேவையின் அவசியம் குறித்து பிரதமர் பேசினார்.

மாநிலங்களின் ஆக்சிஜன் தேவையை அடையாளம் காண்பதற்கும், போதுமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் மாநிலங்களுடன் இணைந்து விரிவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டது.

ஆக்சிஜன் விநியோகம் தொடர்ந்து எவ்வாறு அதிகரித்து வருகிறது என்பது குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. 20 மாநிலங்களின் ஒரு நாளைய தேவையாக இருக்கும் 6,785 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை ஏப்ரல் 21-லிருந்து அம்மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.

தனியார் மற்றும் பொதுத்துறை எஃகு ஆலைகள், தொழிற்சாலைகள், ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்களிப்பு மற்றும் அத்தியாவசியம் இல்லா தொழில் தேவைகளுக்கு ஆக்சிஜனை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையினால் திரவ மருத்துவ ஆக்சிஜனின் இருப்பு ஒரு நாளைக்கு 3,300 மெட்ரிக் டன்னாக கடந்த சில நாட்களில் அதிகரித்துள்ளது என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

அனுமதி அளிக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர மாநிலங்களுடன் இணைந்து தாங்கள் பணியாற்றி வருவதாக அதிகாரிகள் பிரதமருக்கு தெரிவித்தனர்.

பல்வேறு மாநிலங்களுக்கான ஆக்சிஜன் விநியோகம் எளிதாகவும், தடையின்றியும் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார். தடையேதும் ஏற்படும் பட்சத்தில் அதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து முடிவு செய்யவேண்டிய தேவை குறித்து அவர் பேசினார்.

ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு புதுமையான வழிகளைக் கண்டறியுமாறும் அமைச்சகங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

நைட்ரஜன் மற்றும் ஆர்கான் டேங்கர்கள் மாற்றியமைப்பு, டேங்கர்களின் இறக்குமதி, விமானம் மூலம் கொண்டு வருதல் மற்றும் உற்பத்தி செய்தல் ஆகியவற்றின் மூலம் கிரையோஜனிக் டேங்கர்களின் இருப்பை துரிதமாக அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆக்சிஜனை மாநிலங்களுக்கு வேகமாக எடுத்துச் செல்வதை உறுதி செய்வதற்கான தேவை குறித்து பிரதமர் வலியுறுத்தினார். டேங்கர்களை துரிதமாகவும், நீண்ட தூரத்திற்கும் தடையின்றி எடுத்து செல்ல ரயில்வே பயன்படுத்தப்பட்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

105 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டுச் செல்லும் முதல் ரயில் மும்பையிலிருந்து விசாகப்பட்டினத்தை சென்றடைந்துள்ளது. அதேபோன்று, ஆக்சிஜன் விநியோகத்தில் ஒரு வழிப் பயண நேரத்தை குறைப்பதற்காக காலி ஆக்சிஜன் டேங்கர்கள் விமானம் மூலம் ஆக்ஸிஜன் விநியோகஸ்தர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

ஆக்ஸிஜனை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்தும், சில மாநிலங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளில், நோயாளிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இன்றி ஆக்சிஜன் தேவை எவ்வாறு குறைந்தது என்பது குறித்தும் மருத்துவ சமுதாயத்தின் பிரதிநிதிகள் பேசினர்.

ஆக்சிஜனை பதுக்கி வைப்பவர்கள் மீது மாநிலங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் அப்போது வலியுறுத்தினார்.

அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரச் செயலாளர் மற்றும் வர்த்தகம் & தொழில்கள் அமைச்சகம், சாலை போக்குவரத்து அமைச்சகம், மருந்துகள் அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x