

செவ்வாயன்று நைரோபியில் தொடங்கும் உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் பணக்கார நாடுகள் வேளாண் துறைக்கு அதிக அளவில் மானியம் வழங்கும் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பணக்கார நாடுகள் தங்கள் விவசாயத்துக்கு அதிக மானியம் வழங்குவதால் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
டிசம்பர் 15-18-ல் கென்ய தலைநகர் நைரோபியில் உலக வர்த்தக அமைப்பின் 162 உறுப்பு நாடுகள் கூடி உலக வர்த்தகத்தை தாராளமயமாக்குவது பற்றி விவாதிக்கவுள்ளன.
பணக்கார நாடுகளுக்கு சாதகம் செய்யும் விதமான உலக வர்த்தக விதிமுறைகளை அகற்ற வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது.
ஜி33 நாடுகள் மாநாட்டில் இந்திய பிரதிநிதியாகக் கலந்து கொண்ட மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல ஆண்டுகளாக பணக்கார நாடுகளின் விவசாய நலம் விரும்பிகள் இந்தியா உள்ளிட்ட வளரும் மற்றும் ஏழை நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கும் விதமான சொல்லாடல்களை உருவாக்கி வருகின்றனர் என்று கூறியிருந்தார்.
அதாவது பணக்கார நாடுகள் தங்கள் விவசாயத்துறைக்கு அதிக மானியங்கள் வழங்குகின்றன. இதனால் அங்கு விளையும் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு சந்தையில் நிர்ணயிக்கப்படும் விலையுடன் வளரும் மற்றும் ஏழை நாடுகள் உலக வர்த்தகத்தில் பணக்கார நாடுகளின் உற்பத்திப் பொருட்களுடன் போட்டியிட முடியவில்லை. இதனால் நீண்ட கால அடிப்படையில் உள்நாட்டு வேளாண் உற்பத்தியில் சரிவு ஏற்படும் நிலையே தோன்றும் என்று வேளாண் அமைப்புகள் எச்சரிக்கின்றன.
இதனால் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகள் மற்றும் மூன்றில் இரண்டு பங்கு மனித குலத்துக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று இந்தியா கருதுகிறது.
நாடுகளின் உணவு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமே தவிர வர்த்தகத்தைப் பெருக்க மட்டுமே மாநாடுகள் நடத்தப்படக்கூடாது என்று பொருளாதார மற்றும் கொள்கை ஆய்வு அமைப்பின் சர்வதேச திட்டங்களுக்கான இயக்குநர் டெபோரா ஜேம்ஸ் சுட்டிக்காட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே அதிக அளவில் வேளாண் மானியம் வழங்கும் நாடு அமெரிக்கா. 2011-ம் ஆண்டு 139 பில்லியன் டாலர்கள் வேளாண் மானியம் அளித்துள்ளது அமெரிக்கா.
அதேபோல் அமெரிக்காவின் பருத்தி மானியம் உலக அளவில் பருத்தி விலைகளை பாதித்தது. இதனையடுத்து பிரேசில் இருமுறை அமெரிக்காவுக்கு எதிரான உலக வர்த்தக கூட்டமைப்பு வழக்குகளில் வென்றுள்ளது. ஆனால் அமெரிக்கா மாறவில்லை, மானியங்களை குறைப்பதற்குப் பதிலாக பிரேசிலுக்கு 100 மில்லியன் டாலர்கள் தொகையை இழப்பீடாக அளித்தது.
இந்நிலையில் நைரோபி உலக வர்த்தக அமைப்பு மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.