

உலகிலேயே மிக வேகமாக 13 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திய முதல் நாடு இந்தியா என்ற பெயர் கிடைத்துள்ளது.
நாட்டில் தற்போது கரோனா வைரஸ் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கடந்த 5 நாட்களாக தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து 2 லட்சத்தைக் கடந்து பதிவாகி வருகிறது.
இதன் காரணமாக கரோனாதடுப்பூசி செலுத்தும் பணிகளைமத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. அதன்படி வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிசெலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இந்தியாவில் தயாராகும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல் லாமல் ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளையும் போட மத்திய அரசு அனுமதித்துள்ளது.
எனினும், மக்களில் ஒரு சாராருக்கு தடுப்பூசி குறித்த சந்தேகம் நிலவுகிறது. தடுப்பூசி எடுத்து கொண்டாலும்கூட கரோனா பாதிப்பு ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர் களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டாலும்கூட, உயிரிழப்புகள் தடுக்கப்படும் என வல்லுநர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் பொதுமக்களுக்கு கரோனாவைரஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 95 நாட்கள் முடிவடைந்த நிலையில் 13 கோடி தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு போடப்பட்டுள்ளன.
இதன்மூலம் மிகக் குறைந்த நாட்களில் 13 கோடி பேருக்கு தடுப்பூசியை செலுத்திய முதல் நாடு இந்தியா என்ற பெருமையைப் பெற்றுள்ளோம்.
அமெரிக்கா 101 நாட்களில் 13 கோடி டோஸ்களை செலுத்தியது. சீனா 109 நாட்களில் 13 கோடிபேருக்கு டோஸ்களை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
நேற்று வரை இந்தியாவில் 13,01,19,310 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 29,90,197 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், கர்நாடகா, மத்தியபிரதேசம், கேரளா ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 59.33 சதவீதம் பேர் ஆவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.