

கர்நாடக மாநிலத்தில் சில தினங்களாக தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் மயானங்களில் சடலங்கள் காத்திருக்க வேண்டிய அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா தலைமையில் நேற்று முன்தினம் இரவு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், கரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்றனர்.
பின்னர் தலைமை செயலாளர் ரவிக்குமார் கூறியதாவது:
கர்நாடகாவில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதன்கிழமை இரவு முதல் வரும் மே 4-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மூடப்படும். திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள், விளையாட்டு மையங்கள், நீச்சல்குளங்கள், பூங்காக்கள், மதுபான விடுதிகள், அரங்குகள் மூடப்படுகின்றன.
உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். தேவைப்பட்டால் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே நேரில் வந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
மருத்துவமனை, வங்கி, ஊடகம், நீதிமன்றம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப் படுகிறது. திருமணத்தில் 50 பேரும், துக்க நிகழ்ச்சியில் 20 பேரும் மட்டுமே பங்கேற்க வேண்டும். இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.