

டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு சர்ச்சையில் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு அருண் ஜேட்லி தொடர்ந்த அவதூறு வழக்கு குறித்து பதில் அளிக்குமாறு கேஜ்ரிவால் மற்றும் 5 பேருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் குமார் விஸ்வாஸ், அஷுடோஷ், சஞ்சய் சிங், ராகவ் சத்தா, தீபக் பாஜ்பாய் ஆகியோர் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் 3 வாரங்களுக்குள் அளிக்கும் பதிலுக்குப் பிறகு அருண் ஜேட்லி தனது மறுபதிலை அடுத்த 2 வாரங்களுக்கு எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும்.
இதனையடுத்து இந்த அவதூறு வழக்கு விசாரணை பிப்ரவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்:
மத்திய அமைச்சராக பதவியேற்பதற்கு முன், கடந்த 2013-ம் ஆண்டுவரை, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜேட்லி பதவி வகித்தார். டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஒப்பந்தம் போலியான விலாசத்தில், பல்வேறு பெயர்களில் ஒரே நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த நிதி முறைகேட்டில் அப்போது தலைவர் பதவி வகித்த அருண் ஜேட்லிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில், நேற்று முன் தினம் பாஜக எம்.பி. கீர்த்தி ஆஸாத் வீடியோ காட்சிகளுடன் சில ஆதாரங்களை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அருண் ஜேட்லியை பதவியில் இருந்து நீக்கக் கோரி காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
மேலும் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலும் மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியத்தின் தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்துள்ளார்.
இதற்கு ஜேட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது புகழுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அடிப்படை ஆதாரம் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசிவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கேஜ்ரிவால், சஞ்ஜய் சிங், ராகவ், அஷுதோஷ் மற்றும் தீபக் பாஜ்பாய் ஆகியோருக்கு எதிராக ரூ. 10 கோடி கேட்டு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தவிர அவர்களுக்கு எதிராக கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.