

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமே இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன் இத்தகவலைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:
கரோனா தடுப்பூசிகளை மாநில அரசுகளே வாங்கிக்கொள்ளுமாறு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால், மாநில அரசுகள் ஏற்கெனவே நிதிச்சுமையில் உள்ளன.
கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்பால் நிதி நெருக்கடியில் மாநில அரசுகள் தவிக்கின்றன. இந்நேரத்தில் மேலும் நெருக்கடியில் அழுத்துவது போல் உள்ளது மத்திய அரசின் அறிவிப்பு. மாறாக மத்திய அரசு தாமாகவே முன்வந்து மாநில அரசுகளுக்கு கரோனா தடுப்பூசியை இலவசமாக அளித்திருக்க வேண்டும்.
இருப்பினும் கேரள அரசு மக்களை ஏமாற்றாது. ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்குமே இலவசமாக கரோனா தடுப்பூசியை அரசு வழங்கும்.
கேரளாவில் முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போதைய சூழலில் அது ஏற்புடையது அல்ல. மாறாக, கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்ற மக்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. எந்தெந்த மாவட்டங்களில் தொற்று அதிகமாக இருக்கிறதோ அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
கேரளாவைப் போல் சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.