

கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 0.04% பேருக்கும், கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களில் 0.03% பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கம்:
''இதுவரை இந்தியாவில் 13 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 1.1 கோடி பேருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 93,56,436 பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 17,37,178 பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியில் முதல் டோஸ் போட்ட 93 லட்சம் பேரில், 4,208 பேருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் போட்டவர்களில் 695 பேருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பூசி இதுவரை 11 கோடிக்கும் அதிகமானவர்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 10,03,02,745 பேருக்கும், இரண்டாவது டோஸ் 1,57,32,754 பேருக்கும் போடப்பட்டுள்ளது.
இதில் முதல் டோஸ் போட்டவர்களில் 17,145 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் போட்டவர்களில் 5,014 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களில் 0.04% பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களில் 0.03% பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா வைரஸால் தீவிர பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.