

மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை, பண மதிப்பிழப்புக் கொள்கைக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதுமட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகள், மாநிலங்கள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் என்று தெரிவித்தது. 50 சதவீதம் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், 50 சதவீதத்தை வெளிச்சந்தையிலும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய அரசின் இந்தத் தடுப்பூசிக் கொள்கையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தற்போது கரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை என்பது, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. சாமானிய மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், உயிரிழந்துள்ளனர், பணத்தை இழந்துள்ளனர், உடல்நலத்தையும், வாழ்க்கையையும் இழந்துள்ளனர். முடிவில் சில பெரிய தொழிலதிபர்கள்தான் பயன் பெறுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளைத் தடை செய்தபின், அந்த நோட்டுகளை மாற்றவும், ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் மக்கள் வங்கி, ஏடிஎம் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.