

கரோனா வைரஸுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி வரும் மே 1-ம் தேதி முதல் வெளிச்சந்தையில் விற்பனைக்கு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.600 ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவல் உச்சத்தை அடைந்து, நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மத்திய அரசு சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுவரை கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு மட்டுமே வாங்கி மாநில அரசுகளுக்கு வழங்கி வந்த நிலையில், இனிமேல் வெளிச்சந்தையில் மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகள், மாநிலங்கள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் என்று தெரிவித்தது. 50 சதவீதம் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், 50 சதவீதத்தை வெளிச்சந்தையிலும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விலை அளவுக்கு கட்டுப்பாடு ஏதும் மத்திய அரசு நிர்ணயிக்கவில்லை.
வெளிச்சந்தையில் தற்போது கரோனா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்படாத நிலையில் தகுதியான வயதுள்ளவர்கள் அதாவது 45 வயதுள்ளவர்கள், அரசு மருத்துவமனைகள் தவிர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ரூ.250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெளிச்சந்தையில் மருந்து விற்பனைக்கு வந்தால், தனிநபர்களுக்கு ரூ.600 (2டோஸ்) ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “அடுத்த இரு மாதங்களில் கரோனா தடுப்பூசி உற்பத்தியில் பற்றாக்குறை இல்லாத சூழலை எட்டுவோம். வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி எங்களின் 50 சதவீதம் தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும் தனியாருக்கும், 50 சதவீதம் மத்திய அரசின் கரோனா தடுப்பூசி திட்டத்துக்கும் வழங்குவோம். தனிநபருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி ரூ.600 ஆகவும் (2 டோஸ்), மாநிலங்களுக்கு ரூ.400 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளோடு ஒப்பிடும்போது நம்நாட்டில் தடுப்பூசி விலை மிகவும் குறைவு. அமெரிக்காவில் தடுப்பூசி தனிநபர் ஒருவருக்கு ரூ.1,500 ஆகவும, ரஷ்யாவில் ரூ.750 ஆகவும், சீனாவில், ரூ.750 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது கோவிஷீல்ட் விலை குறைவு’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாரத் பயோடெக், ஐசிஎம்ஆர் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியின் விலை வெளிச்சந்தையில் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.