Last Updated : 21 Apr, 2021 10:31 AM

 

Published : 21 Apr 2021 10:31 AM
Last Updated : 21 Apr 2021 10:31 AM

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியது: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 2,023 பேர் பலி

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 2,023 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம் பின்வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2,95,041 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை மொத்தம் 1,56,16,130 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 7வது நாளாக கரோனா தொற்று 2 லட்சத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

நாடு முழுவதும் இதுநாள்வரை மொத்தமாக 1,32,76,039 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 2,023 பேர் உயிரிழந்தனர். இது இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் என்பது அதிர்ச்சித் தகவல்.
இதனால் மொத்த உயிரிழப்பு 1,82,553 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி நாட்டில் 21,57,538 பேர் கரோனாவுக்காக சிகிச்சையில் உள்ளனர்.

இதற்கிடையில் தொடர் விழிப்புணர்வு காரணமாக 13,01,19,310 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி கரோனா தடுப்பூசித் திட்டம் தொடங்கியது. இதில் கடந்த ஏப்ரல் 11 முதல் 14 வரை தடுப்பூசித் திருவிழாவும் நடத்தப்பட்டது. அதன்பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 29.9 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வரும் மே 1ம் தேதி தொடங்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசி திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடம்:

கரோனாவால் பாதிக்கப்படுவதில் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று மாநிலத்தில் புதிதாக 62,097 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் இதுவரை 39.6 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் 519 பேர் பலியாகினர். இந்நிலையில் மாநிலத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அமைச்சர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை கரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x