

கரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிற நிலையில், மத்திய அரசு கரோனா தடுப்பூசி மீதான இறக்குமதி வரியை நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பரவல் உச்சம் தொட்டுள்ள நிலையில், மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள மருத்துவமனைக்கு வந்தபடி உள்ளனர். ஆனால் போதிய அளவில் தடுப்பூசி இல்லாதனால் திரும்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் தடுப்பூசியை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த இறக்குமதி வரியை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விரைவிலேயே ரஷ்யாவின் கரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் இந்தியாவுக்கு வரவுள்ளது. மேலும், ஃபைஸர், மாடர்னா, ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் போன்ற நிறுவனங்களும் அதன் தடுப்பூசியை இந்தியாவில் விற்கவேண்டும் என்று மத்திய அரசுஅந்நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன் நீட்சியாகவே இறக்குமதி வரியை நீக்க இருப்பதாக தெரிகிறது.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக கரோனா பரவல்தீவிரமடைந்துள்ளது. நாளொன்றுக்கு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பூசியை பரவலாக கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.