Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

5 மாநில வாக்கு எண்ணிக்கை முன்கூட்டியே நடைபெறுமா..?

மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அங்கு முதல் கட்ட தேர்தல் மார்ச் 27 –ல் தொடங்கியது. இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் மூன்று கட்ட தேர்தல் ஏப்ரல் 22, 26 மற்றும் 29 –ல் நடைபெற உள்ளது.

வேகமாகப் பரவி வரும் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக, பிரசாரக் காலத்தைக் குறைத்து தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. நிலைமையின் விபரீதம் கருதி, முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்கள். எனவே, குறைந்தபட்சம் 7 மற்றும் 8-ம் கட்டத் தேர்தலையேனும் ஒன்றிணைத்து ஒரே நாளில் நடத்துமாறு மம்தா பானர்ஜி கடிதம் மூலம் தேர்தல் ஆணையத்திடம் வற்புத்தியுள்ளார்.

கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த 13-ம் தேதி, “தற்போது நிலவும் அபாயகரமான நிலையைக்கருத்தில் கொண்டு விபரீத விளைவுகள் ஏற்படாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தது. இக்கருத்தை தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத் தேர்தலில் மிக முக்கிய போட்டியாளரான திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தின் முதல்வரும் ஆவார். தேர்தல் நிறைவுற்று மீண்டும் அவரோ (அ) வேறு எவரோ முதல்வராகப் பதவி ஏற்கும் வரை, சட்டப்படி மாநிலத்தின் நிர்வாகப் பொறுப்பு அவரிடமே இருக்கிறது.

மக்களின் நலன் கருதி அவர்விடுக்கிற வேண்டுகோள் ஆணையத்தால் முறையாக, முழுமையாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.

“மாவட்ட ஆட்சியர் தேர்தலை நடத்துவாரா அல்லது கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்ப்பாரா?” என்று மம்தா கேட்பதன் பொருள் – கரோனா தடுப்பு நடவடிக்கையைத் தள்ளிப் போட முடியாது; விரைவாகத் தேர்தலை முடித்து அவர்களைப் பிற பணிகளை செய்ய விடுங்கள் என்பதுதான். மம்தாவின் கோரிக்கைக்கு எந்தத் திசையில் இருந்தும் எதிர்ப்பு வந்ததாகத் தெரியவில்லை.

இந்தியத் தேர்தல் ஆணையம் சற்றும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக இது குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு நல்ல முடிவை விரைந்து எடுப்பதே அனைவருக்கும் நல்லது. அவ்வாறு நிகழ்ந்தால், தற்போதுள்ள திட்டத்துக்கு மூன்று நாட்கள் முன்பாகவே வாக்குப் பதிவு நிறைவடைந்து விடும். அதற்கேற்ப, 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 30 அல்லது மே முதல் தேதியில் கூட நடைபெறலாம்.

மாநில நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் கோரிக்கையை நிராகரிப்பதற்கான வலுவான காரணம் எதுவும் ஆணையத்துக்கு இருக்கும் என்று தோன்றவில்லை.

ஏப்ரல் 22-ல் ஆறாம் கட்டத் தேர்தல் முடிந்தவுடன், ஆணையம் தீவிரமாக இதனைப் பரிசீலித்து, தனது முடிவை அறிவிக்கும் என்று தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x