

கரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை நாட்டில் பரவி வருவதால் பல்வேறு மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கும் வார இறுதி ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து சொந்த ஊர் திரும்புகின்றனர். கடந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தவித்தனர். பலர் சைக்கிளிலும் நடந்தும் சொந்த ஊருக்கு செல்லத் தொடங்கினர். இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவது மத்திய அரசின் கடமையாகும். ஆனால் கரோனா வைரஸ் பரவலுக்கு மக்களை குறை கூறும் ஓர் அரசாங்கம் அத்தகைய பொதுநல நடவடிக்கையை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.