

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து ஹரியாணா உட்பட டெல்லியின் அருகில் உள்ள மாநிலங்களின் எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி எல்லையை ஒட்டியுள்ள ஹரியாணாவின் குர்கிராம், பரிதாபாத், சோனிபட் ஆகிய மாவட்டங்களில் சுமார் 42 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஹரியாணாவில் தினமும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், கூறியதாவது:
டெல்லி - ஹரியாணா எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பற்றி கவலைப்படுகிறேன். ஹரியாணாவில் உள்ள ஒவ்வொருவர் குறித்தும் கவலையும் அக்கறையும் கொள்வது எனது கடமை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யவேண்டும். மாநில அரசு அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யும். விவசாயிகளுக்கு கரானா தடுப்பூசியும் போட ஹரியாணா அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அனில் விஜ் கூறினார்