

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்கார வழக்கில் தண்டனை முடிந்த இளம் குற்றவாளியை விடுதலை செய்வதற்கு தடைவிதிக்கக் கோரி டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மேலும் இளம் குற்றவாளி விடுதலையை தடுத்து நிறுத்த சட்டத்தில் இடமில்லை என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப் பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு வெளியே வீசியெறியப்பட்ட நிர்பயா (ஜோதி சிங்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்ற ஐவரில் ஒருவருக்கு அப்போது 17 வயதே ஆகி இருந்ததால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை காலம் முடிந்ததை அடுத்து, நேற்று முன்தினம் அவர் விடுவிக்கப்பட்டார். பாதுகாப்பு கருதி அவரை ஒரு தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்துள் ளனர்.
முன்னதாக இளம் குற்றவாளி விடுதலைக்கு தடை கோரி டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் சார்பில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஏ.கே.கோயல் மற்றும் யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததுடன், இளம் குற்றவாளியின் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர். இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மகளிர் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘சிறார் நீதி சட்டத்தில் உள்ள ஷரத்துக்களை ஆய்வு செய்யாமல் டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. இளம் குற்றவாளி முழுமையாக திருந்தவில்லை என உளவுத்துறை அறிக்கையில் முரணான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இளம் குற்றவாளியை விடுதலை செய்வதற்கு தடை விதித்து அவர் மீதான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர உத்தரவிட வேண்டும்’’ என்றார்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்தும், மகளிர் ஆணைய வழக்கறிஞருக்கு ஆதரவாக வாதாடினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘உங்களது கவலை புரிகிறது. ஆனால், சட்டத்தில் அதற்கு இடமில்லை. தண்டனை காலத்தை முழுமையாக அனுபவித்த ஒரு குற்றவாளிக்கு மேற்கொண்டு தண்டனையை நீட்டிக்க முடியாது. சட்டத்தில் இல்லாத அம்சங்களுக்கு ஆதரவு தெரிவித்து வாதாடுவது சரியல்ல. வாழும் உரிமைக்கான உத்தரவாதத்தை அரசியல் சாசனம் அளித்துள்ளது. அதனை நீதிமன்றம் புறக்கணிக்காது. எக்காரணம் கொண்டும் இளம் குற்றவாளியின் சிறைவாசத்தை நீட்டிக்க முடியாது’’ எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இளம் குற்றவாளி விடுதலைக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறித்து நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால்.
‘தீப்பந்தங்கள் ஏந்த வேண்டும்’
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கடும் அதிருப்தி அடைந்துள்ள டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால், நாட்டுக்கு இது ஒரு கருப்பு தினம் என கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று அவர் கூறியதாவது:
நாட்டின் வரலாற்று பக்கங்களில் பெண்களுக்கு இன்றைய தினம் ஒரு கருப்பு தினமாக பதிவாகும். கொடும் குற்றங்களில் ஈடுபடும் இளம் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றாமல், மாநிலங்களவை நாட்டு மக்களை வஞ்சித்துவிட்டது. பெண்களின் கவலையை உச்ச நீதிமன்றம் புரிந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. அதேசமயம் சட்டம் இடம் அளிக்காத காரணத்தினால், இந்த வழக்கில் மேற்கொண்டு எதையும் செய்ய முடியவில்லை என கைவிரித்துவிட்டது. இனியும், பெண்கள் நீதி கேட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடத்தாமல் தீப்பந்தங்களை கையில் எடுக்க வேண்டும். அதற்கான தருணம் வந்துவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.