

தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்ற, தன் உயிரைப் பணயம் வைத்த ரயில்வே ஊழியரின் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில், ரயில்வே மற்றும் பல்வேறு தரப்பினர் அந்த ஊழியருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் வாங்கனி ரயில் நிலையம் உள்ளது. இதில், கடந்த ஏப்.17-ம் தேதி மாலை, 2-ம் எண் நடைமேடையில் பார்வையற்ற தனது தாயுடன் 6 வயதுச் சிறுவன் நடந்து வந்து கொண்டிருந்தான். தாயின் வலதுபுறம் தண்டவாளத்தை ஒட்டி நடந்துவந்த சிறுவன், தன்னையும் அறியாமல் நிலைதடுமாறி உள்ளே தவறி விழுந்தான். அப்போது எதிர்ப் புறத்தில் ரயில் ஒன்று விரைந்து வந்தது.
அப்போது செய்வதறியாமல் தவித்த தாய், தண்டவாளத்துக்கு அருகே முட்டி போட்டு அமர்ந்து மகனைத் தேடினார். ஆனால், சிறுவனால் பிளாட்பாரத்துக்கு வரமுடியவில்லை. ரயில் விரைந்து வந்த நிலையில், எதிர்ப் பக்கத்தில் இருந்து ஓடி வந்த மயூர் ஷெல்கே என்னும் ரயில்வே ஊழியர், சிறுவனைத் தூக்கி பிளாட்பாரத்தில் நிற்க வைத்தார், அவரும் பிளாட்பாரத்தின் மீது ஏறினார். அடுத்த நொடி ரயில் அந்த இடத்தைக் கடந்தது.
இந்நிலையில், ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கேவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முன்னதாக மயூரின் முன்மாதிரியான தைரியத்திற்கும் தொழில் மீதான பக்திக்கும் தலை வணங்குகிறோம் என்று இந்திய ரயில்வே பாராட்டு தெரிவித்தது. மேலும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மயூரை அழைத்துப் பேசி, பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் வாங்கனி ரயில் நிலைய ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மயூருக்குக் கரவொலி எழுப்பி, இன்று மரியாதை செலுத்தினர். அவருக்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மயூர் ஷெல்கே, ''நான் எதிரில் வரும் உத்யான் ரயில் செல்லக் கொடி அசைப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். அப்போது நடைமேடையில் கண் பார்வையற்ற தாய் எதுவும் செய்ய முடியாமல், தனது குழந்தையைக் காப்பாற்றத் தவித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாகக் குழந்தையைக் காப்பாற்ற முடிவு செய்து, குழந்தையை நோக்கி ஓடினேன். ஆனால் அதே நேரத்தில் நானும் ஆபத்தில் சிக்கலாம் என்றும் யோசித்தேன். என் உயிரைப் பணயம் வைத்தாவது குழந்தையைக் கட்டாயம் மீட்க வேண்டும் என்று முடிவெடுத்து ஓடினேன். நல்வாய்ப்பாக என்னால் குழந்தையைக் காப்பாற்ற முடிந்தது'' என்று தெரிவித்தார்.