Published : 20 Apr 2021 01:39 PM
Last Updated : 20 Apr 2021 01:39 PM

5 நகரங்களில் ஊரடங்கு இல்லை: உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்

உத்தர பிரதேசத்தில் 5 நகரங்களில் முழு ஊரடங்கு விதித்து அலகபாத் உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

உ.பி.யிலும் கரோனா வேகமாக பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால் 9 மாவட்டங்களில் இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை என நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைநகர் லக்னோ, பிரயாக்ராஜ், வாரணாசி, கவுதம்புத்நகர், காஜியாபாத், மீரட் ஆகிய முக்கிய மாவட்டங்களும் ஊரடங்கு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

கரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் முதல்முறை பிடிபடுபவர்களுக்கு ரூ.1,000 அபராதமும் 2-வது முறையாக பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி.யில் 1 முதல் 12 -ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மே 15 வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மே 20-ம் தேதிக்கு பிறகு தேர்வு நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்போது இணைய வகுப்புகளை தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த லக்னோ, கான்பூர், கோரக்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ் ஆகிய 5 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தக் கோரி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் ஏப்ரல் 26-ம் தேத வரை ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து உ.பி. அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. உ.பி. அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ‘‘திடீரென ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பெரிய அளவில் நிர்வாக சிக்கல் ஏற்படும். மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்’’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அலகபாத் உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. 

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x