Last Updated : 20 Apr, 2021 03:13 AM

 

Published : 20 Apr 2021 03:13 AM
Last Updated : 20 Apr 2021 03:13 AM

மத்திய பொதுத்துறை நிறுவன மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்த அறிவுறுத்தல்

நாடு முழுவதிலும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் வேளையில் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பிரிவு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு அமைச்சகங்களின்கீழ் நாடு முழுவதிலும் மத்தியபொதுத் துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பணியாளர்களுக்காக மருத்துவமனைகள் உள்ளன. வழக்கமாக இவற்றில்வெளியாட்களுக்கு சிகிச்சை அளிப்பதில்லை.

இந்நிலையில் நாட்டின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே பொதுத் துறை நிறுவன மருத்துவமனையின்படுக்கைகளை பொதுமக்களுக்கு ஒதுக்க வேண்டும். இவற்றை கரோனா தீவிர சிகிச்சை பிரிவாக மாற்றி, நவீன கருவிகளுடன் அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும்.

நிறுவனப் பணிகளை பாதிக்காதவாறு வெளியில் இருந்து வருவோருக்கு இப் பிரிவுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும். இந்த வசதிகளை செய்து முடித்த பின் அதற்கான அறிவிப்பை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

பொறுப்பு அதிகாரி

இந்த தனிப் பிரிவுகளுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மத்திய அமைச்சகம் சார்பில் ஒருபொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். இவர்களின் கைப்பேசி எண்களை நிறுவனம் அமைந்துள்ள மாநில அரசுகளிடம் அளிக்கவேண்டும்” என அறிவுறுத்தப்பட் டுள்ளது.

கரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழலும் உள்ளது. இதை சமாளிக்க அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இதில், தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் உருளைகளை ஏப்ரல் 22 முதல்நிறுத்தி வைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதில் 9 வகை தொழிற்சாலைகளுக்கு மட்டும் விலக்குஅளிக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில், மருந்து, அணு உலை, ஸ்டீல், நீர் சுத்திகரிப்பு, உணவு உள்ளிட்ட தொழிற்சாலைகள் உள்ளன.

இத்துடன் ஆக்சிஜன் தேவைஅதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் மகாராஷ்டிரா, டெல்லி, ம.பி., சத்தீஸ்கர், குஜராத் உள் ளிட்ட மாநிலங்களுடன் தமிழகமும் இடம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x