

மருத்துவ நிபுணர்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களின் மருத்துவமனைகளில் படுக்கை வசதி, வென்டிலேட்டர், ஆக்சிஜன் சிலிண்டர், உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளோடு முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடுத்தடுத்து அவசர ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். காலை 11.30 மணிக்கு மூத்த அதிகாரிகளோடு கலந்தாலோசித்தார். இதன்பிறகு மாலை 4.30 மணிக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மருத்துவ நிபுணர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது வைரஸ் பரவலைதடுப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் முக்கிய ஆலோசனைகளை வழங்கினர். இவற்றை பிரதமர் நரேந்திர மோடி கவனமாக கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு நாட்டின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது கரோனா தடுப்பூசி உட்பட உயிர் காக்கும் மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் அறிவுறுத்தினார்.
கடந்த 17-ம் தேதி மத்திய அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் கரோனா தடுப்புநடவடிக்கைகள் தொடர்பாக மத்தியஅரசு அதிகாரிகள், மாநில அரசு களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். மாநில அரசுகளின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார்.
இதன்படி கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா நேற்று மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கலின் தலைமைச் செயலாளர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத் தினார். அப்போது ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் களை ஏற்பாடு செய்ய கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா உறுதி அளித்தார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். வெவ்வேறு நாட்களில் 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க அவர் திட்டமிட்டிருந்தார்.
இந்த 4 பொதுக்கூட்டங்களும் தற்போது ஒரே நாளுக்கு மாற் றப்பட்டுள்ளது. இதன்படி வரும் 23-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.