ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பு: காஷ்மீரில் பள்ளி ஆசிரியர் கைது

ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பு: காஷ்மீரில் பள்ளி ஆசிரியர் கைது
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீரில், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சாபர் என்ற பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஜவுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில் பணியாற்றும் இவரை டெல்லி போலீஸார் நேற்று காலையில் கைது செய்தனர். இவர் மீது அரசு ரகசியங்கள் காக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையின் இணை ஆணையர் ரவீந்திர யாதவ் கூறினார்.

ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்பு உள்ளதாக ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நான்காவதாக சாபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஎஸ்ஐ உளவாளி என்று சந்தேகிக்கப்படும் கஃபைதுல்லா கானை டெல்லி போலீஸார் கடந்த மாதம் 26-ம் தேதி கைது செய்தனர்.

ஜம்முவில் இருந்து போபால் நகருக்கு செல்லும் வழியில் டெல்லி ரயில் நிலையத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவர் தன்னுடன் மேலும் பலரை உளவாளியாக சேர்ப்பதற்காக போபால் செல்ல முயன்றதாக தெரியவந்தது.

கஃபைதுல்லா கானிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, பிஎஸ்எப் தலைமைக் காவலர் அப்துல் ரஷீத், ஓய்வுபெற்ற ராணுவ ஹவல்தார் முனாவர் அகமது மீர் ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் ஆசிரியர் சபேர் மூலமாகவே அப்துல் ரஷீத், முனாவர் அகமது மீர் உள்ளிட்டோரை கஃபைதுல்லா கான் சந்தித்ததாக தெரியவந்துள்ளது. கஃபைதுல்லா கான் சந்தித்த மற்றொரு ராணுவ வீரரை விசாரிக்க, மேற்கு வங்க மாநிலம் சிலிகுரிக்கு போலீஸார் விரைந்துள்ளனர்.

இதனிடையே ஆசிரியர் சாபர் கைது செய்யப்பட்டபோது, அவருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் வழியாக பாகிஸ்தானில் இருந்து சாபருக்கு நீண்ட காலமாக பணம் வந்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளுமானால் எல்லையில் வீரர்கள் நிறுத்தப்படும் இடங்கள் தொடர்பான மிக முக்கிய தகவலை சிலிகுரியில் உள்ள ஒரு நபரிடம் இருந்து சாபர் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in