

மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் 6-வது வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 16 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் 3 தொகுதி களுக்கான வேட்பாளர்கள் பெயரும் இடம் பெற்றுள்ளது. மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம.சுகந்தன், தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி, காங்கிரஸில் இருந்து விலகி திவாரி காங்கிரஸில் தலைவராக இருந்தார். 2002, அக்டோபரில் வாழப்பாடி ராமமூர்த்தி மறைந்த பின்பு அவரது மூத்த மகன் ராம.சுகந்தன், திவாரி காங்கிரஸை கலைத்து மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் அளித்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் சேவா தளப்பிரிவின் தலைவரான கோ.செல்வராஜ், பொள்ளாச்சியில் போட்டியிடுகிறார். இருமுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ள செல்வராஜ், முதன்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
திருவள்ளூரில் விக்டரி எம்.ஜெய்குமார் வேட்பா ளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக இளைஞர் காங்கிரஸின் செயலாளர் களில் ஒருவர். இவரது தந்தை விக்டரி மோகன், ஆவடி நகரசபை காங்கிரஸ் தலைவராக இருந்தவர். டெல்லியில் கட்சியின் பொதுச் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி இந்த வேட்பாளர் பட்டியலை திங்கள்கிழமை வெளியிட்டார். இதில், கர்நாடகம், ஒடிசா, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது இந்த பட்டியலிலும் அறிவிக்கப்படவில்லை. ராஜஸ்தானின் தயூசா தனித் தொகுதியில் மத்திய அமைச்சர் நமோ நாராயண் மீனா போட்டியிடுகிறார்.