

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கிற்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது, ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது.
இதையடுத்து, பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கடிதம் எழுதி, 5 முக்கிய அம்சங்களை வலியுறுத்தியிருந்தார். தடுப்பூசி போடுதலை விரைவுப்படுத்த வேண்டும், தடுப்பூசி போடும் வயதினரைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட ஆலோசனை வழங்கியிருந்தார்.
மன்மோகன் சிங் கடிதத்துக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தனும் இன்று பதல் அளித்திருந்தார். அதில், குறிப்பாக கரோனா தடுப்பூசி குறித்து தேவையற்ற வதந்திகளையும், தவறான தகவல்களையும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்தான் பரப்புகிறார்கள். உங்கள் ஆலோசனைகளை உங்கள் கட்சியினர் மதித்து நடக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் , மன்மோகன் சிங்கிற்கு உடல்நலக்குறை ஏற்பட்டதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உடனடியாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துமனையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் குழு கண்காணிப்பால் மன்மோகன் சிங் இருந்து வருகிறார். நல்ல உடல் நிலையில் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.