

இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் ஜெர்மனி நாட்டின் சுற்றுச்சூழல் இயற்கை மற்றும் அணுசக்தி பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து ‘கடல்சார் சுற்றுச்சூழலில் நெகிழி பொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நகரங்கள்' என்ற தலைப்பில் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றில் இன்று கையெழுத்திட்டன.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, “2021 ஆம் ஆண்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான ஆக்கபூர்வ வளர்ச்சி ஒத்துழைப்பின் 63-வது ஆண்டு நிறைவை குறிக்கிறது என்று கூறினார்.
நிலையான திடக்கழிவு மேலாண்மையில் கவனம் செலுத்தும் நகர்புற தூய்மை இந்தியா திட்டம் மற்றும் 2022-ஆம் ஆண்டுக்குள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழியின் உபயோகத்தை முற்றிலும் தடைசெய்யும் பிரதமரின் தொலைநோக்கு பார்வையையும் இந்தத் திட்டத்தின் பலன்கள், ஒத்து இருக்கிறது”, என்று கூறினார்.
நெகிழிப் பொருட்கள் கடல்சார் சுற்றுச்சூழலில் கலப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம் தேசிய அளவில், உத்தரப் பிரதேசம், கேரளா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும், கான்பூர், கொச்சின், போர்ட் பிளேயர் ஆகிய நகரங்களிலும் மூன்றரை ஆண்டுகளுக்கு மேற்கொள்ளப்படும்.