

ராஜஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு ஆபத்தான கட்டத்தில் இருப்பதால்தான் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தோம். மக்களை அச்சுறுத்துவதற்காக அல்ல என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
நாடுமுழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ராஜஸ்தானில் நேற்று மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர், 42 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, நேற்று இரவு வரும் மே 3ம் தேதிவரை இருவாரங்களுக்கு மக்கள் சுயகட்டுப்பாடு வாரம் என்று ராஜஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:
ராஜஸ்தானில் கரோனா வைரஸ் பாதிப்பு சூழல் ஆபத்தான கட்டத்தில், அபாயமான சூழலில் இருப்பதால்தான், உடனடியாக கேபினெட் கூட்டத்தைக் கூட்டி லாக்டவுன் உள்ளிட்ட முடிவுகளை எடுத்தோம்.
புதிய கட்டுப்பாடுகள், விதிமுறைகள் அனைத்தும் கரோனா வைரஸ் பரவலைக் குறைக்கவும், உயிரிழப்பைத் தடுக்கவும் கொண்டுவரப்பட்டது. மக்களை அச்சுறுத்துவதற்காக அல்ல. தொழிலாளர்கள் இந்த லாக்டவுனால் யாரும் அச்சப்பட வேண்டாம்.
எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கரோனாவைரஸ் காற்றில் பரவுகிறது, என்பதால், சூழல் மோசமாக இருக்கிறது. நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம் என்பதால், ஒவ்வொருவரும் கரோனா தடுப்பு விதிகளை மறக்காமல் பின்பற்ற வேண்டும்.
கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுன் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான் நாங்கள் மக்களை பாதிக்காத வகையில் லாக்டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளோம்
ராஜஸ்தான் அரசு நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலத்தில் அடுத்த 2 வாரங்களுக்கு தனியார் அலுவலகங்கள், குறிப்பிட்ட அரசு அலுவலகங்கள், அத்தியாவசியமற்ற வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள் மூடப்படும். தொழிற்சாலைகளில் கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயக்கலாம்.
100 நாட்கள் வேலைத்திட்டம், சேமிப்புக் கிடங்கு, வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவை, இனிப்புக் கடைகள், பங்குவர்த்தகம், திருமண வைபவங்கள், தடுப்பூசி போடச் செல்லும் மக்கள், ரேஷன் கடைகள், விவசாயிகளிடம் இருந்து அரசுகிட்டங்கிகளில் கொள்முதல், பலசரக்குகடை, காய்கறி, பழக்கடை, பால்கடை, பேருந்து நிலையம், ரயில்நிலையம்,விமானநிலையம் செல்லும் மக்கள், அத்தியாவசியப் பணிக்குச் செல்லும் மக்கள் ஆகியோருக்கு தடையில்லை.
இருவாரங்களுக்கு பொது ஒழுங்கு வாரம் கடைபிடிக்கிறோம், கரோனா வைரஸுக்கு எதிராக இது முக்கியமானதாகும். ஒவ்வொருவரும் இதைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, முறையாக சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும்
இவ்வாறு கெலாட் தெரிவித்தார்.