டெல்லியில் 6 நாட்கள் லாக்டவுன்: சுகாதார செயல்முறை குலையவில்லை-  உச்சத்தை அடைந்துவிட்டது: கேஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேட்டி அளித்த காட்சி | படம் ஏஎன்ஐ
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேட்டி அளித்த காட்சி | படம் ஏஎன்ஐ
Updated on
2 min read

டெல்லியில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று இரவு 10 மணி முதல் வரும் வாரம் திங்கள் கிழமை காலை 5 மணி வரை அடுத்த 6 நாட்களுக்கு முழுமையாக லாக்டவுன் அமலாகும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவித்தார்.

டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுடன் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நடத்திய ஆலோசனைக்குப்பின் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. டெல்லியில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, டெல்லியில் லாக்டவுன் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.

இருப்பினும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கெனவே டெல்லி அரசு கொண்டு வந்துள்ளது. முகக்கவசம் இல்லாமல் வெளியே சென்றால் அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டெல்லி மாநிலம் கரோனா 4-வது அலையைச் சந்தித்து வருகிறது. நாள்தோறும் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி அரசின் சுகாதாரத்துறை செயல்முறை உச்ச கட்டத்துக்கு வந்துவிட்டது.

ஆனால் குலைந்துவிட்டது என்று சொல்லவில்லை,உச்சத்தை அடைந்துவிட்டது என்று சொல்கிறேன். சுகாதார செயல்முறை அதிகமான அழுத்தத்தில் இருக்கிறது. சுகாதாரச் செயல்முறை சரிந்து விழுவதற்குள் சில கடினமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஏறக்குறைய 25 ஆயிரம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த 4 நாட்களாகவே தொடர்ந்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனாவில் பாதிக்கப்படுவோரும், தொற்றுக்கு ஆளாவோரும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டால், சுகாதாரச் செயல்முறையே சீர்குலைந்துவிடும். டெல்லி மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.

ஆதலால், இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கள் கிழமை காலை 5 மணிவரை 6 நாட்களுக்கு முழு ஊரடங்கை டெல்லியில் அமல்படுத்துகிறோம். அத்தியாவசிய சேவைகள், உணவு, மருத்துவ சேவைகள் தொடர்ந்து இயங்கும். திருமணம் உள்ளிட்ட விசேஷங்களில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமணத்துக்கான தனியாக அனுமதி வழங்கப்படும். இதற்கான முறையான விரிவான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்.

அடுத்த 6 நாட்களில் டெல்லி மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் அமைக்கப்படும். டெல்லி அரசுக்கு தொடர்ந்து உதவி வரும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். லாக்டவுன் காலத்தில் ஆக்ஸிஜன், மருந்துகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வோம். அனைவரும் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றக் கேட்டுக்கொள்கிறேன்.

டெல்லியில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் கவலைப்பட வேண்டாம். உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,இது சிறிய லாக்டவுன் மட்டும்தான், டெல்லியை விட்டுச் செல்ல வேண்டாம். அடுத்தாக லாக்டவுன் தேவைப்படாது என்று நம்புகிறேன், உங்களை டெல்லி அரசு கவனமாகப் பார்த்துக்கொள்ளும்.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in