

முஸ்லிம்களுக்கு புதிய விதிமுறைகளுடன் இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்காக செல்பவர்கள், கரோனா தடுப்புக்கான இரண்டாவது ஊசியும் செலுத்திக் கொள்வது அவசியமாக்கப்பட்டு உள்ளது.
சவுதி அரேபியாவிலுள்ள மெக்கா, மதீனாவில் ஹஜ் புனித யாத்திரைக்காக இந்தியாவின் முஸ்லிம்கள் வருடந்தோறும் சென்று வருகின்றனர். கடந்த வருடம் துவங்கிய கரோனா பரவலால் உலகம் முழுவதிலிமிருந்து வரும் ஹஜ் புனித யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டது.
பிறகு இது குறைந்து மீண்டும் மறு உருவத்துடன் பரவத் துவங்கிய நிலையில், இந்த வருடம் ஹஜ் செல்ல சவுதி அரேபியா அனுமதித்து உள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலிருந்து ஹஜ் புனித யாத்திரை செல்லும் முஸ்லிம்களுக்காக இந்திய ஹஜ் கமிட்டி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இக்கமிட்டி, மத்திய வெளியுறத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
ஹஜ் கமிட்டி அறிவிப்பின்படி, இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை செல்ல விரும்புபவர்கள் கரோனா தடுப்புக்கான இரண்டாவது ஊசியும் செலுத்திக் கொள்வது அவசியமாக்கப்பட்டுள்ளது. இதை செலுத்திக் கொண்டதற்கான மருத்துவச் சான்றிதழை அவர்கள் ஹஜ் கமிட்டிக்கு முன்கூட்டியே அனுப்ப வேண்டி இருக்கும்.
இந்த வருடம் அநேகமாக வரும் ஜூலை 19 அல்லது 20 இல் ஹஜ் யாத்திரை அமைய உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஹஜ் கமிட்டி சார்பில் ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு இணையதளம் மூலம் பெறப்பட்டுள்ளன.
இதற்கான வயதுவரம்பு 18 முதல் 65 வரையில் ஆகும். 18 வயதிற்கு குறைந்தவர்களுக்கும், கைக்குழந்தைகளுக்கும் அனுமதி கிடையாது.
இதனிடையே, சவூதி அரேபிய வருபவர்கள் விமானம் இறங்கியவுடன் 72 மணி நேரம் தனிமைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு கரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பிற்காக எனக் காரணம் கூறப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரையின் மீதான குறிப்பிட்டக் கட்டுப்பாடுகளை இன்னும் சவுதி அரேபியா அரசு அறிவிக்கவில்லை. இதன் அறிவிப்பிற்கு பிறகு தான் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து செல்லும் யாத்ரீகர்கள் எண்ணிக்கை முடிவாகும்.
எனினும், ஒவ்வொரு வருடம் செல்வது போன்ற எண்ணிக்கையில் இந்த வருடமும் அனுமதி அரிதாகவே கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.