6 மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கரோனா நெகட்டிவ் சான்றிதழ்: மகாராஷ்டிரா அரசு கிடுக்கிப்பிடி

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read


கேரளா, டெல்லி தலைநகர் மண்டலம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் கண்டிப்பாக கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு நேற்று இரவு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர், உயிரிழப்பும் அதிகரி்த்து வருகிறது. இதில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிரா மாநிலம்தான். நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 6 மாநிலங்கள் கரோனா வைரஸ் பரவலில் முக்கிய இடங்களாகத் திகழ்வதால், அந்த மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் மட்டும் கண்டிப்பாக கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் சீதாராம் குந்தே நேற்று இரவு வெளியிட்ட உத்தரவில், “ கேரளா, கோவா, குஜராத், டெல்லி, தலைநகர் மண்டலம், ராஜஸ்தான், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் கரோனா வைரஸ் பரவலில் முக்கிய இடங்களாக இருக்கின்றன. இந்த மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் ரயில்கள் மூலம் வருவோர் 48 மணிநேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும்.

மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால்தான், இந்த 6 மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் உச்சமாக இருப்பதால்தான், இங்கிருந்து வருவோருக்கு மட்டும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்கப்படுகிறது.

மகாராஷ்டிராவுக்கு வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்குப்பின்புதான் அனுமதிக்கப்படுவார்கள். பரிசோதனையின்போது அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ரயில் பயணத்தின்போது பயணிகள் சமூக விலகலைக் கடைபிடித்து வர வேண்டும்.

மகாராஷ்டிராவுக்கு வரும் பயணிகள் யாருக்கும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் வழங்கக் கூடாது என்று ரயில்வே அமைசச்கத்தை கேட்டுக்கொண்டுள்ளோம். முன்பதிவு செய்து மகாராஷ்டிரா வரும் பயணிகள் குறித்த விவரங்கள் புறப்படுவதற்கு 4 மணிநேரத்துக்கு முன் மகாராஷ்டிரா பேரிடர் மேலாண்மை அமைப்பிடம் ரயில்வே துறை விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும்.

பயணிகள் யாரேனும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவராமல் இருந்தால், அவர்களுக்கு ரயில் நிலையத்தில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்படும். அதில் கரோனா அறிகுறிகள் இருந்தால் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in