

பிரதமர் மோடியையும் என்னையும் வாசைபாடுவதற்கே மம்தா பானர்ஜி அதிக நேரம் செலவிடுகிறார் என தேர்தல் பிரச்சாரத்தில் அமித் ஷா குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 6-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள புர்பா பர்த்மான் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
மேற்கு வங்கத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான திட்டம் முதல்வர் மம்தா பானர்ஜியிடம் இல்லை. பிரதமர் மோடியையும் என்னையும் வசைபாடுவதிலேயே மம்தா அதிக நேரத்தை செலவிடுகிறார். மேலும் பாதுகாப்புப் படையினரையும் குறை கூறி வருகிறார்.
கூச் பெஹர் மாவட்டம் சிதால்குச்சி நகரில் நடைபெற்ற 4-ம் கட்ட வாக்குப்பதிவின்போது வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் எதிர்பாராத விதமாக 4 பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் மம்தா பேசுவது போன்ற ஒரு குரல் பதிவு சமீபத்தில் வெளியாகி உள்ளது. அதில், 4 பேரின் உடலை சுமந்தபடி ஊர்வலமாக சென்று போராடுங்கள் என கட்சியினருக்கு உத்தரவிடுகிறார். சகோதரியே, இறந்தவர்களின் உடலை வைத்து நீங்கள் அரசியல் செய்வது அவமானம்.
மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக ஊடுருவுவது தொடர்கிறது. இதனால், மண்ணின் மைந்தர்களின் வேலை, ரேஷன் உள்ளிட்ட உரிமை பறிக்கப்படுகிறது. எனவே,பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல் தடுக்கப்படும். இதுபோல மதுவாஸ் மற்றும் நமஷுத்ராஸ் அகதிகளுக்கு 70 ஆண்டுகளாக குடியுரிமை வழங்கப்படவில்லை. பாஜக ஆட்சி அமைந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
வெடிகுண்டு, துப்பாக்கி, ஆயுதங்கள் என்ற வங்கத்தின் இப்போதைய கலாச்சாரத்தை, நம்பிக்கை, வளர்ச்சி, வர்த்தகம் என மாற்றிக் காட்டுவோம். இந்தத் தேர்தலில் சகோதரியின் கட்சியைவிட 122 இடங்கள் கூடுதலாக பெற்று பாஜக ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.