பொருளாதார ரீதியாக நாடு மிகப் பெரும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ள போகிறது: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரிக்கை

பொருளாதார ரீதியாக நாடு மிகப் பெரும் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்ள போகிறது: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரிக்கை
Updated on
1 min read

கரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிற நிலையில், கரோனா இரண்டாம் அலை பொருளாதார ரீதியாக மிகப் பெரும் நிச்சயமின்மையை ஏற்படுத்தும் என்றும் அதை எதிர்கொள்வதற்கு நாடு தயாராக வேண்டிய நிலையில் உள்ளது என்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா இரண்டாம் கட்டப் பரவல் தீவிரமடைந்துள்ளது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்தமாநிலம் நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளனர். தொழிற் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நுகர்வோர் மற்றும் முதலீட்டாளர் தரப்பில் மிகப் பெரும் நிச்சயமின்மை ஏற்பட்டு வருகிறது என்றும் வரும் நாட்களில் பொருளாதார செயல்பாடுகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் நேற்று அவர் தெரிவித்தார்.

‘இந்தியா காரோனா பரவலை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், இங்கிலாந்து மற்றும் வேறு சில நாடுகளிலிருந்து பரவிய உருமாறிய கரோனா வைரஸ், தற்போது சூழலை சிக்கலாக்கிவிட்டது. இந்த இரண்டாம் கட்டப் பரவல் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மிகப் பெரும் நிச்சயமின்மைக்குத் தயாராக வேண்டிய நிலையில் நாடு உள்ளது' என்று அவர் கூறினார்.

எனினும், நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 11 சதவீதம் அளவில் இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தேவைப்படும் சூழலில் மத்திய அரசு, ஊக்கத் திட்டங்களை அறிவிக்கும் என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in