Published : 19 Apr 2021 03:14 AM
Last Updated : 19 Apr 2021 03:14 AM

ஆற்றில் கண்டெடுத்த இளம்பெண்ணுக்கு ஊரே சேர்ந்து திருமணம் செய்ய முடிவு: ஒடிசாவில் வியக்க வைக்கும் சம்பவம்

ஆற்றில் கண்டெடுத்த பெண்ணுக்கு ஊரே சேர்ந்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஒடிசா மாநில கிராம மக்களின் இந்த மனிதநேயம் காண்போரை வியக்கச் செய்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் சோனி யாதவ், கடந்த 2016-ல் ஆற்றில் தவறி விழுந்துவிட்டார். மகாநதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவர் ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா மாவட்டம் குஸ்மேல் கிராமத்தில் கரை ஒதுங்கினார். கரையில் சேறு சகதியில் சிக்கி மூச்சுக்காக திணறிக் கொண்டிருந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த சன்யாசி காலோ என்ற தொழிலாளி அந்த பெண்ணை மீட்டு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினார்.

அதன் பின்னர் அந்த பெண் சன்யாசி காலோ வீட்டிலேயே தங்கிவிட்டார். இப்போது அந்த பெண்ணுக்குத் திருமணம் ஏற்பாடாகியுள்ளது. ஊரே சேர்ந்து அந்தத் திருமணத்தை நடத்தி வைக்கவுள்ளது.

இதுகுறித்து சன்யாசி காலோ கூறும்போது, “சோனி யாதவை மீட்டு அவரது சொந்த கிராமத்துக்கு அழைத்துச் சென்று போலீஸ் நிலையத்தில் தகவல்தெரிவித்தோம். வீட்டு வேலை செய்துகொண்டிருந்த சோனி யாதவுக்கு பெற்றோர் இல்லை. உறவினரின் பராமரிப்பில் இருந்தாள். மேலும் அவர் எங்களுடனேயே தங்கிவிட முடிவு செய்துவிட்டார். போலீஸாரிடம் தகவல் தெரிவித்து முறைப்படி சோனி யாதவை தத்தெடுத்து வளர்த்து வருகிறோம். எங்களுக்கு பெண் குழந்தைகள் இல்லை. 3 ஆண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர். பெண் குழந்தை வேண்டும் என எதிர்பார்த்தோம். கடவுள் பார்த்து அனுப்பியவர்தான் சோனி யாதவ். இவரை எங்கள் கிராம மக்கள் மகாநதி சிறுமி என்றே அழைத்து வருகின்றனர்" என்றார்.

சோனி யாதவ் கூறும்போது, “என்னைக்காப்பாற்றிய சன்யாசி காலோ குடும்பத்தார் மீது அதீத அன்பு ஏற்பட்டுவிட்டது. மேலும் எனக்கு வீட்டு வேலை செய்து பிழைக்க விருப்பம் இல்லை. எனவே சன்யாசி குடும்பத்தாருடன் இணைந்துவிட்டேன்.கடந்த 5 வருடங்களில் ஓரளவுக்கு ஒரியா மொழி பேசக் கற்றுக்கொண்டேன். சில நாட்கள் பள்ளிக்குச் சென்றேன். பின்னர் வீட்டில் தையல் எந்திரம் வாங்கி துணி தைக்கக் கற்றுக்கொண்டேன். தற்போது குர்தா, ஜாக்கெட், முகக்கவசம், கைக்குட்டைகள் தைத்து விற்று வருகிறேன்.திருமணத்துக்குப் பிறகு இங்கேயே ஒரு கடை திறக்கத் திட்டமிட்டுள்ளேன்” என்றார்.

இந்நிலையில் சோனி யாதவுக்கு திருமணம் செய்ய சன்யாசி காலோ முடிவுசெய்தார். ஆனால் போதிய பணவசதி இல்லாததால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி வரும் 21-ம் தேதி திருமணம் செய்யவுள்ளனர். ஜார்சுகுடா தொகுதி எம்எல்ஏ கிஷோர் மொஹந்தியும் இதற்குத்தேவையான நிதியைத் தரவுள்ளார்.

கரோனா வைரஸ் விதிமுறைகளைப் பின்பற்றி திருமணம் நடைபெறவுளள்ளது. இவர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டம் தர்மஜெய்கர் கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தம் யாதவ் (25) என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x