

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் அஜய் கார்ஹ்.சிறு வயதில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் அவருக்கு காது கேளாமலும், வாய் பேச முடியாமலும் போய்விட்டது. எனினும், வீட்டில்முடங்கி விடாமல், ஓவியக் கலையை கையில் எடுத்து அவர் வாழ்க்கையில் முன்னேறியுள்ளார்.
ராஜஸ்தான் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அஜய் கார்ஹ் தமது ஓவியங்களைக் கொண்டு கண்காட்சிகளை நடத்தியுள்ளார். மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், அஜய் கார்ஹ் தனது சில ஓவியங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளார். இந்த ஓவியங்களை பார்த்த பிரதமர் மோடி, அஜய் கார்ஹின்திறமையை பாராட்டி அவருக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உங்கள் ஓவியங்களையும், திறமையையும் கண்டு வியப்பில் மலைத்துவிட்டேன். மிகவும் தத்ரூபமாகவும், மனித மனங்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும் உங்கள் ஓவியங்கள் அமைந்திருக்கின்றன.
உங்களின் திறமையும், வாழ்க்கையும் நம் நாட்டின் ஏராளமான மக்களுக்கு உத்வேகத்தை அளித்து வருகிறது. வாழ்வில் கஷ்டங்களையும், சோதனைகளையும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, நேர்மறை எண்ணத்துடன் தடைகளை கடந்தால் வாழ்க்கையில் புதிய உயரங்களை தொடலாம் என்பதற்கு நீங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. உங்கள் திறமையும், சாதனைகளும் மென்மேலும் உயரட்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.