Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

கரோனா தொற்றை சமாளிக்க 5 அம்ச வழிமுறைகள்- பிரதமர் நரேந்திர மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்

புதுடெல்லி

கரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை சமாளிக்க 5 அம்ச வழிமுறைகளை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் நேற்று எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

அடுத்த 6 மாதங்களில், தடுப்பு மருந்து உற்பத்திக்காக அனுமதி தரப்பட்டு உள்ள நிறுவனங்கள், விநியோகிக்க உரிமம் பெற்ற நிறுவனங்கள் பற்றிய விவரங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்தால், அதற்கு முன்னதாக தேவையான அளவு தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மருந்துகளை வழங்க உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

தடுப்பு மருந்துகளை அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அவசர காலத்தில் விநியோகம் செய்வதற்கு 10 சதவீத மருந்துகளை மத்திய அரசு தன் வசம் வைத்திருக்க வேண்டும். மற்றவற்றை, மாநில அரசுகள் பயன்படுத்தி கொள்ள தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும்

முன்களப் பணியாளர்கள் யார் என்பதை வரையறுக்கவும். அவர்கள் 45 வயதுக்கு கீழ் இருந்தாலும் தடுப்பூசி போடுவதற்கும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

உதாரணமாக பள்ளி ஆசிரியர் கள், பஸ் மற்றும் மூன்று சக்கர மற்றும் டாக்சி டிரைவர்கள், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களை மாநில அரசுகள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அனுமதி வழங்கலாம். அவர்கள் 45 வயதுக்கு கீழ் இருந் தாலும் தடுப்பூசி போட அனுமதி வழங்கலாம்.

கடந்த பல ஆண்டுகளாக, உலகளவில் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தியாளராக இந்தியா விளங்கியது. இதற்கு அரசின் கொள்கையும், பாதுகாக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமையுமே காரணம்.

தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் அதிகம். சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை விரைவாக அதிகரிக்க தேவையான நிதி மற்றும் சலுகைகளை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.

மேலும், சட்டத்தில் உள்ள கட்டாய உரிமம் முறையை அமல்படுத்த வேண்டும். இதன் மூலம், ஒரு உரிமத்தின் மூலமாக, தடுப்பு மருந்தை ஏராளமான நிறுவனங்கள் உற்பத்தி செய்ய முடியும். இது போன்ற முறை எய்ட்ஸ் நோய் பரவிய நேரத்தில் கடைபிடிக்கப்பட்டது. கரோனா கவலைக்கு உரியதாக உள்ள நிலையில், கட்டாய லைசென்ஸ் முறையை இஸ்ரேல் அமல்படுத்தி உள்ளது. இந்தியாவில், அதிகம் பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த திட்டத்தை இந்தியா விரைவாக கடைபிடிக்க வேண்டும்.

உள்நாட்டு மருந்து குறைவாக உள்ளதால், ஐரோப்பிய மருத்துவ நிறுவனம் அல்லது அமெரிக்க மருத்துவ நிறுவனம் ஒப்புதல் வழங்கிய மருந்துகளை, நமது நாட்டில் எந்த தடையும் இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். நாம், கணிக்க முடியாத அவசர நிலையை எதிர்கொண்டு வருகிறோம். அவசர காலத்தில் இவ்வாறு செய்வதை நிபுணர்கள் ஏற்று கொள்வார்கள். இந்த தளர்வை குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கலாம். இந்த தடுப்பூசிகளை தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பயன்படுத்தலாம்.

இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x