

மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமே விசாரணை கமிஷன் அமைக்கும் அதிகாரம் இருப்பதாக வும், யூனியன் பிரதேசமான டெல்லி அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதன் காரணமாக மத்திய அமைச்சர் அருண் ஜேட்லிக்கு எதிராக டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் அமைத்த ஒரு நபர் விசாரணை கமிஷன் செயல்பாட்டுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதவி வகித்த காலத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்க, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஒரு நபர் விசாரணை கமிஷனை அமைத்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஜேட்லி சார்பில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி தலைவர்கள் 5 பேருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ரூ.10 கோடி கேட்டு அவதுாறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், யூனியன் பிரதேச அந்தஸ்தில் உள்ள டெல்லி அரசுக்கு விசாரணை கமிஷன் அமைக்கும் அதிகாரம் இல்லை என துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் நேற்று உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து வெளியான தகவலில் கூறப்பட்டிருப்பதாவது:
1952ல் இயற்றப்பட்ட விசாரணை கமிஷன் சட்டத்தின்படி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மட்டுமே விசாரணை கமிஷன் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி யூனியன் பிரதேச அந்தஸ்தில் இருப்பதால், அதற்கு அந்த அதிகாரம் இல்லை. மேலும் டெல்லியில் இருந்து மட்டுமின்றி, பிற மாநில அரசுகளிடம் இருந்து டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு நிதி சென்றுள்ளது. எனவே இந்த விவகாரம் டெல்லி அரசின் விசாரணை வரம்புக்குள் வராது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
இதன் காரணமாக அரவிந்த் கேஜ்ரிவால் அமைத்த விசாரணை கமிஷன் செயல்பாட்டுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று கூறியதாவது:
போலீஸ், சிபிஐ உட்பட அனைத்து புலனாய்வு அமைப்பு களும் மத்திய அரசின் கட்டுப் பாட்டில் தான் இருக்கின்றன. அப்படி இருக்கும் போது மாநில அரசு அமைத்துள்ள ஒரேயொரு விசாரணை கமிஷனை எதிர் கொள்ள பிரதமரும், அருண் ஜேட்லியும் ஏன் அச்சமடைய வேண்டும் என தெரியவில்லை.
மேலும் டெல்லி அரசின் விசாரணை கமிஷனை தடுத்து நிறுத்த துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. போலீஸ், சட்டம்-ஒழுங்கு மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட மூன்று விவகாரங் களை கவனித்துக் கொள்வதற்கு மட்டுமே அவருக்கு அதிகாரம் உள்ளது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித் தால், ஊழலுக்கு அவர்கள் துணை போகின்றனர் என்று தான் அர்த்தமாகும். எனவே விசார ணைக்கு மத்திய அமைச்சர் ஜேட்லி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதற்கு முட்டுக்கட்டை போட முயற்சிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் செயல்படுவதாகவும் டெல்லி அரசு குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.