

மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின்போது திமுக உறுப்பினர் திருச்சி சிவா கூறியதாவது:
கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வு எழுதுவோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, அவர்கள் தங்கள் புத்தகங்களை மட்டுமல்லாது படிப்பதற்கான நேரத்தையும் இழந்துள்ளனர்.
எனவே, தேர்வுக்கு தயாராக அவர்களுக்கு சிறிது கால அவகாசம் அளிக்க வேண்டும். வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள முதன்மைத் தேர்வை இரண்டு வாரம் ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, “இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்” என்றார்.