

நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் கரோனா ஊரடங்கு காரணமாக கோவிட் 19 தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்படக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் 2-வது அலையின் பிடிக்குள் இந்தியா சிக்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல மாநிலங்கள் வார இறுதி ஊரடங்கையும், பல கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன.
அதிகபட்சமாக கடந்த 15ம் தேதி 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு அது தொடர்ந்து வருகிறது. இந்தநிலையில் கோவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது.
இதனால் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் கரோனா ஊரடங்கு காரணமாக கோவிட் 19 தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்படக்கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கரோனா கட்டுப்பாடுகளால் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போடாமல் வீடுகளில் முடங்கி விடக்கூடாது எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.