Published : 18 Apr 2021 06:32 PM
Last Updated : 18 Apr 2021 06:32 PM

கோவிட் நோயாளிகளுக்கு அவசர தேவை; திரவ மருத்துவ ஆக்ஸிஜன், சிலிண்டர்கள் கொண்டு செல்ல தயார் நிலையில் ரயில்வே

புதுடெல்லி

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்ல ரயில்வே முழு அளவில் தயாராகி கொண்டிருக்கிறது.

தீவிர பாதிப்புள்ள கோவிட் நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஆக்ஸிஜன் தேவை மிக முக்கியமானது. திரவ மருத்துவ ஆக்ஸிஜன் டேங்கர்களை ரயில் மூலம் கொண்டு வர முடியுமா என ரயில்வே துறையிடம் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் கேட்டுக் கொண்டன.

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் கொண்டு செல்வதற்கான தொழில்நுட்ப சாத்தியங்களை ரயில்வே உடனடியாக ஆராய்ந்தது. டேங்கர் லாரிகளை, ரயில்கள் மூலம் ஏற்றிச் செல்வதன் மூலம் திரவ ஆக்ஸிஜன்களை கொண்டுச் செல்ல முடியும். 3320 மி.மீ உயரமுள்ள டேங்கர் லாரிகளை, 1290 மி.மீ உயரமுள்ள தட்டையான சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் கொண்டு செல்வது சாத்தியம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கான பரிசோதனைகள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. மும்பையிலிருந்து ஒரு டேங்கர் லாரி, டெல்லி கொண்டுவரப்பட்டு, குறுக்குச் சாலை பாலங்களை, டேங்கர் லாரி உரசுகிறதா என்ற சோதனைகள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வின் அடிப்படையில், டேங்கர் லாரிகளை சரக்கு ரயில்கள் மூலம் கொண்டுச் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த டேங்கர் லாரிகளை வர்த்தக ரீதியில் கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய சுற்றறிக்கையை ரயில்வே நிர்வாகம் கடந்த 16ம் தேதி வெளியிட்டுள்ளது.

திரவ மருத்துவ ஆக்ஸிஜன் டேங்கர்களை கொண்டு செல்வது குறித்து ரயில்வே வாரியம் மற்றும் மாநில போக்குவரத்து ஆணையர்கள் இடையே கடந்த 17-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

மும்பையிலிருந்து காலி டேங்கர் லாரிகளை விசாகப்பட்டினம், ஜம்ஷெட்பூர், ரூர்கேலா,பகோரா ஆகிய இடங்களுக்கு ஏற்றிச் சென்று, அந்த இடங்களில் இருந்து திரவ மருத்துவ ஆக்ஸிஜனை நிரப்பி வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டேங்கர் லாரிகளை சம்பந்தப்பட்ட ரயில் நிலையங்களில் ஏற்றி, இறக்குவதற்கான வசதிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தயாராகிவிடும்.

மும்பையிலிருந்து 10 காலி டேங்கர் லாரிகளை கொண்டு செல்லும் திட்டம் நாளை (ஏப்ரல் 19ம் தேதி) மேற்கொள்ளப்படுகிறது.

திரவ ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகளை ரயிலில் கொண்டு செல்வதற்கு முழு அளவில் தயாராகுமாறு, மண்டல பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x