

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, ஜேஇஇ-மெயின்ஸ் நுழைவுத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
ஜேஇஇ மெயின்ஸ் நுழைவுத் தேர்வு நாடுமுழுவதும் வரும் 27 முதல் 30ம் தேதிவரை நடப்பதாக இருந்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருந்து வருகிறது. நாள்தோறும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2.61 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வு ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டு, 12-ம் வகுப்புத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. முதுகலை நீட் தேர்வுகளும் , சிஐஎஸ்சிஇ வாரியமும் 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளன.
இந்நிலையில்வரும் 27 முதல் 30ம் தேதிவரை நடக்க இருந்த ஜேஇஇ மெயின்ஸ் நுழைவுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ நாட்டில் நிலவும் கரோனா வைரஸ் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு, ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு ஏப்ரல் மாதம் நடக்க இருந்ததை ஒத்தி வைக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமையின் இயக்குநரைக் கேட்டுக்கொள்கிறேன்.
மாணவர்களின் உடல்நலப் பாதுகாப்பு, மற்றும் எதிர்காலக் கல்வி ஆகியவைதான் என்னுடைய, மத்திய கல்விஅமைச்சகத்தின் முக்கியமான அக்கறையாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டஅறிவிப்பில் “ நாட்டில் நிலவும் கரோனா வைரஸ் பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் உடல்நலன், தேர்வு நடத்தும் பணியாளர்கள் ஆகியோரின் உடல்நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு இம்மாதம் இறுதியில் நடக்கஇருந்தது ஒத்தி வைக்கப்படுகிறது. நுழைவுத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும், தேர்வு நடத்தப்படுவதற்கு 15 நாட்கள் முன்பாக தேதிகள் அறிவிக்கப்படும் “ எனத் தெ ரிவிக்கப்பட்டுள்ளது.