

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுகாதார அவசரநிலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,501 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை, 18 லட்சத்து ஆயிரத்து 316 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத்,பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊடரங்கை பிறப்பித்து மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை வகுத்துள்ளன. பல மாநிலங்களுக்கு தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் நிலவுகிறது.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, இதை 25 ஆகக் குறைக்க வேண்டும் எனக் கோரி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். மேலும், தடுப்பூசி ஏற்றுமதியையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், “ நாட்டில் கரோனாவில் குணமடைபவர்களைவிட பாதிக்கப்படுவோர் வேகமாக அதிகரித்து வருகின்றனர். தேசிய சுகாதார அவசரநிலைைய அறிவியுங்கள். தேர்தல் ஆணையம் தேர்தல் பிரச்சாரங்களை ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும், மக்களின் உயிர்களை நீதிமன்றம் காக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.