

செம்மர கடத்தல் வழக்கில் 2 சீனர்கள் உட்பட 7 பேரை கடப்பா போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து கடப்பா டி.எஸ்.பி ராகுல் தேவ் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
செம்மர கடத்தலை முற்றிலும் தடுக்க ஆந்திராவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று கடப்பா மாவட்டத்தில் 2 சீனர்கள், 2 திபெத்தியர்கள் உட்பட 7 பேர் செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். சீனாவின் ஹுனான் பகுதியைச் சேர்ந்த ஜூங் ஜி (34), சூ லி (27), திபெத் நாட்டை சேர்ந்த பசாங் செரிங் (37), சோனம் செரிங் (27), மத்திய பிரதேசம், ரத்லம் மாவட்டத்தை சேர்ந்த ரகுநாத் தங்கால் (32), முகேஷ் தாஸ் பைராகி (31), டெல்லியை சேர்ந்த மனீஷ் பால் லூத்ரா (31) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் களிடமிருந்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 768 கிலோ எடையுள்ள 30 செம்மரங்கள், ஒரு கார், 11 செல்போன்கள், 1 லேப்டாப் மற்றும் வெளிநாட்டு பண நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு டி.எஸ்.பி ராகுல் தேவ் ஷர்மா கூறினார்.