ஜேட்லி மீதான ஊழல் குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி புகார்களுக்கு டெல்லி கிரிக்கெட் சங்கம் மறுப்பு

ஜேட்லி மீதான ஊழல் குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி புகார்களுக்கு டெல்லி கிரிக்கெட் சங்கம் மறுப்பு
Updated on
2 min read

தங்கள் சங்கத்தின் மீதான ஊழல் புகார்கள் முற்றிலும் ஆதாரமற்றவை, சாராம்சமற்றவை என்று டெல்லி கிரிக்கெட் சங்கம் மறுத்துள்ளது.

இது குறித்து தொடர்ச்சியாக 2-வது நாளாக டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் முதன்மை நிர்வாகிகள், செய்தியாளர்களை சந்தித்து மறுப்பு மேல் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் (பொறுப்பு) சேத்தன் சவுகான் கூறும்போது, "ஒட்டுமொத்த கிரிக்கெட் ஆட்ட வளர்ச்சிக்காகவே அருண் ஜேட்லி பாடுபட்டார். கோட்லா மைதானத்தை உலகத் தரத்துக்கு உயர்த்தியவரை இந்த சர்ச்சையில் தொடர்புபடுத்துவது தேவையில்லாதது.

நாங்கள் நிதிகளை கையாண்டது பற்றி நேற்று விளக்கம் அளித்தோம், நாங்கள் எதையும் மறைக்கவில்லை, இனி மறைக்கப்போவதும் இல்லை.

நேற்று நான் குறிப்பிட்டபோது ஸ்டேடிய கட்டுமான செலவு ரூ.114 கோடி என்று குறிப்பிட்டேன். முதல் ஒப்பந்தம் இபிஐஎல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது, இதன் மதிப்பு ரூ.27 கோடி. இது ஒரு தளத்துக்கு மட்டுமானதே, ஆனால் 3 அடுக்கு கொண்ட கட்டிட அமைப்பு தேவை என்று நாங்கள் முடிவெடுத்த போது 45,000 பார்வையாளர்களுக்கான வசதிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதற்கான தொடக்க கட்டுமான செலவுகள் ரூ.57.20 கோடி. பிற கூடுதல் செலவுகளும் சேர மொத்த செலவு ரூ.114 கோடி ஆனது, இதை நான் தவறாக ரூ.141 கோடி என்று தெரிவித்துவிட்டேன்.

அருண் ஜேட்லியின் தலைவர் பதவி காலக்கட்டத்தில் எந்த வித முறைகேடுகளும் நடக்கவில்லை. நீங்கள் வேண்டுமானால் எஸ்.எஃப்.ஐ.ஓ அறிக்கையை சரிபார்த்துக் கொள்ளலாம். நடைமுறை தவறுகள் மட்டுமே சில ஏற்பட்டன. அதற்காக நாங்கள் அபராதமும் செலுத்தினோம். ஜேட்லி தலைவராக இருந்த போது கிரிமினல் வழக்குகள் எதுவும் இல்லை. அப்படி தவறு நிகழ்ந்திருந்தால் எஸ்.எஃப்.ஐ.ஓ. நடவடிக்கை எடுத்திருக்கும்.

மேலும் 2012-ல் வேறு அரசு ஆட்சியில் இருந்தது. முந்தைய அரசின் ஆட்சிக் காலத்தில் விசாரணை நிறைவடைந்தது. அனைத்தும் கவனமாக கையாளப்பட்டது. அருண் ஜேட்லி அப்போது பொறுப்பில் இல்லை.

அருண் ஜேட்லி நாடாளுமன்ற தேர்தல்கள் காரணமாக 2013-ல் பொறுப்பிலிருந்து விலகினார். அவர் தொடர்ந்து கிரிக்கெட் சங்கப் பதவியில் இருக்க வேண்டும் என்றே விரும்பினோம், ஆனால் தேர்தல் வந்துவிட்டது. அன்றாடப் பணிகளில் அருண் ஜேட்லி ஒருபோதும் குறுக்கிட்டதில்லை. அவர் டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்காக பெரும் சேவையாற்றியுள்ளார்.

அவரது பரவலான அனுபவம் காரணமாக அவரது வழிகாட்டுதலை நாங்கள் அவ்வப்போது நாடுகிறோம்.

டெல்லி அரசு டெல்லி கிரிக்கெட் சங்க விவகாரங்களை விசாரிக்க முடியாது. அவர்கள் விசாரணை மேற்கொண்டதே எங்களுக்கு தெரியாது. வந்து விவாதிக்குமாறு அவர்கள் எங்களுக்கு அறிவுறுத்தினர். டிடிசிஏ மத்திய நிறுவன விவகார அமைச்சகத்தின் கீழ் வருவதால் மாநில அரசு எங்களிடம் கேள்விகள் கேட்க முடியாது” என்றார்.

கீர்த்தி ஆசாத் எழுப்பும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கூறிய சவுகான், “நாங்கள் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியை ஏற்படுத்தினோம். அவர் தனக்கு ஒரு அறையும் ஸ்டெனோவும் வேண்டும் என்றார். பிறகு அணித்தேர்வு விவகாரங்களில் மூக்கை நுழைத்தார். நான் அணித்தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தேன். அப்போது உங்களைக் கொண்டு வந்தது ஆலோசனைக்காகத்தான், டெல்லி கிரிக்கெட் சங்கம் முழுதையும் நீங்கள் கட்டுப்படுத்துவதற்காக அல்ல என்று நாங்கள் கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது” என்றார்.

சேவாக், கம்பீர் ஆகியோர் டெல்லி அணித்தேர்வில் ஊழல் என்று புகார் எழுப்பியுள்ளனரே என்று கேட்ட போது, “யாரும் அணித்தேர்வில் தலையிடுவதில்லை, 90% கேப்டனின் விருப்பத்துடனேயே செல்வோம். விரேந்திர சேவாக் டெல்லி கிரிக்கெட் சங்கம் மீது ஊழல் புகார் சுமத்துகிறார் என்றால், அவர் புதிதாகச் சேர்ந்துள்ள ஹரியாணா மாநில கிரிக்கெட் சங்கம் எப்படி நடத்தப்படுகிறது என்பதிலிருந்து அவர் கற்றுக் கொள்வார். அதற்குள் நாம் செல்ல வேண்டாம்” என்றார்.

“டெல்லி ஸ்டேடியம் கட்டுமானம் குறித்த அனைத்து முறையான ஆவணங்களும் கைவசம் உள்ளன, ஒதுக்கீடு கடிதங்கள், குத்தகை ஒப்பந்தமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கூறுவது இந்த நிலத்தில் நாங்கள் சட்டவிரோதமாக வந்து அமரவில்லை” என்றார் சவுகான்.

புகார்களுக்கு அருண் ஜேட்லி மறுப்பு:

டிடிசிஏ விவகாரம் பிரச்சார அரசியல் உத்திகளின் ஒரு பகுதியே. பிரச்சினைகளில் அவர்களே சிக்கியிருக்கும் போது அதனை திசைதிருப்பவே இந்த உத்தி.

நான் 2013-ம் ஆண்டு கிரிக்கெட் நிர்வாகத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன். 2014-15 தொடர்பான விவகாரங்களில் என்னை இழுக்க முடியாது.

கூட்டாட்சித் தத்துவம் என்பது ஒரு வழிப்பாதையல்ல. மாநிலமோ, யூனியன் பிரதேசமோ ஏற்றுக் கொள்ள முடியாதபடி நடந்து கொண்டால் அதுவுமே கூட்டாட்சி அமைப்புக்கு அச்சுறுத்தலே.

அரவிந்த் கேஜ்ரிவால் உண்மையல்லாதவற்றையும் அவதூறையும் நம்புகிறவர் போல் தெரிகிறது. அவர் இதனை வெளிப்படுத்தும் முறை ஹிஸ்டீரியா நோய்க்கு வெகு அருகில் உள்ளது.

இவ்வாறு கூறினார் அருண் ஜேட்லி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in