

உத்தரப் பிரதேசம் அயோத்தியில் வரும் ஏப்ரல் 21-ல் ராம்நவமி கொண்டாடப்படவுள்ளது. மீண்டும் கரோனா பரவி வரும் சூழலில் இதை வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என சாதுக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்துக்களின் முக்கியக் கடவுளாகக் கருதப்படும் ராமரின் பிறந்த நாள், இந்த வருடம் ஏப்ரல் 21 இல் வரவிருக்கிறது. இந்நாளை ஒவ்வொரு வருடமும் அயோத்தியில் மிகவும் விமரிசையுடன் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதற்காக நாடு முழுவதிலுமிருந்து சுமார் இருபது லட்சம் பக்தர்கள் வரை அயோத்தியில் கூடுவது உண்டு. இந்த வருடம் அயோத்தியின் ராமநவமி கொண்டாட்டத்திற்கு கரோனாவால் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால், கரோனா தொற்றிலிருந்து தப்ப ராமநவமியை தங்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என அயோத்தி சாதுக்கள் வலியுறுத்தி உள்ளனர். அதேபோல் நவராத்திரிக்காகவும் கோயில்களுக்கு செல்லாமல் தம் தாயை வீட்டிலிருந்தபடி வணங்கவும் கோரப்பட்டுள்ளது.
இது குறித்து ராமஜென்மபூமியின் தலைமை அர்சகரான ஆச்சார்யா சத்யேந்தர தாஸ் கூறும்போது, ‘தற்போதைய கரோனா பரவல் சூழலில் நாம் அனைவரும் வீட்டில் தங்கியிருப்பது நல்லது.
இந்த கரோனாவை மனிதர்களான நம்மால் இன்னும் வெல்ல முடியவில்லை. இந்த சூழல் மாறும் வரை அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனிமை விலகலைக் கடைப்பிடிப்பது அவசியம்.’ எனத் தெரிவித்துள்ளார்.
அயோத்தியின் ரனோபாலி ஆசிரமத்தின் சாதுவான மஹந்த் டாக்டர்.பரத் தாஸ் கூறும்போது, ‘கரோனாவில் இந்த காலகட்டம் மிகவும் மோசமாக உள்ளது.
இச்சூழலில் எவரும் தங்கள் வீட்டிற்கு வெளியே சென்று கடவுளைக் கும்பிட வேண்டிய அவசியம் இல்லை. இதனால், ஏற்படும் கவனக்குறைவு நம் சமூகத்தில் அனைவரையும் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.’ எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், அயோத்தியில் ராமநவமி கொண்டாட்டத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கொண்டவர்களுடன் முடிக்க ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.
இதன் நேரடிக் காட்சிகளை தூர்தர்ஷனில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளன.