தடுப்பூசி ஏற்றுமதியாளராக இருந்த நாம் இறக்குமதியாளராக மாறிவிட்டோம்: மத்திய அரசை சாடிய பிரியங்கா காந்தி 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி | கோப்புப்படம்
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி | கோப்புப்படம்
Updated on
1 min read

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலை முறையாகக் கையாளதது குறித்து மத்திய அரசைச் சாடியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தடுப்பூசி ஏற்றுமதியாளராக இருந்த நாம், இறக்குமதியாளராக மாறிவிட்டோம் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

ஆனால் உள்நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்கும் போது, மத்திய அரசு தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது, அதை நிறுத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தடுப்பூசி போடும் வயதையும் 25 ஆகக் குறைக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுத்து செயல்படுத்தி வருகிறோம், எந்த மாநிலத்திலும் தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் மத்திய அரசைச் சாடியுள்ளார். அதில் “ இந்தியாவில் கரோனா பாதிப்பு ஏற்படும் பேரழிவுகளைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது, 70 ஆண்டுகால அரசின் முயற்சிகளை அழிக்கும் வகையில் தடுப்பூசி ஏற்றுமதியாளராக இருந்த நாம், வலுக்கட்டாயமாக இறக்குமதியாளராக மாறியிருக்கிறோம்.

நரேந்திரமோடி, விமானத்தில் பயணிக்கும் பயணிகளில் யார் ஒருவர் விமானியின் புகைப்படத்தை போர்டிங் பாஸில் ஒட்டியிருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே ஆபத்தான நேரத்தில் விமானத்திலிருந்து தப்பிக்கும் உயிர்காக்கும் பட்டனை அழுத்த முடியும்” என்று பிரதமர் மோடியை சாடியுள்ளார்.

இதற்கு பாஜக தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை.

உத்தரப்பிரதேசம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரியங்க காந்தி “ உத்தரப்பிரதேசத்தில் கரோனாதொற்று 10 நாட்களில் 7 மடங்கு உயர்ந்துவிட்டது. இப்போது கரோனா பரவல் கிராமங்களுக்கும் பரவி வருகிறது. நகரங்களிலும் கரோனா பரிசோதனைக்கான கருவிகள் பற்றாக்குறையாக இருக்கின்றன, ஆர்டி பிசிஆர் கருவிகள் போதுமான அளவில் இல்லை. லக்னோ, நொய்டா, காஜியாபாத், பனாரஸ், அலகாபாத்தில் மக்கள் பரிசோதனைக்காக காத்திருக்கிறார்கள். மாநிலத்தைக் காக்க, ஆர்டி பிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in