Published : 17 Apr 2021 03:04 PM
Last Updated : 17 Apr 2021 03:04 PM

கரோனாவை கும்பமேளா பிரசாதமாக கொடுத்து விடாதீர்கள்: மும்பை மேயர் வலியுறுத்தல்

கும்ப மேளா சென்றவர்கள் தங்கள் சொந்த மாநிலம் திரும்பியவுடன் வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும், மக்களுக்கு கரோனாவை பிரசாதமாக கொடுத்து விடக்கூடாது என மும்பை மேயர் கிஷோரி பெட்நேகர் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளா திருவிழாவை 30 நாட்கள் மட்டும் நடத்திக்கொள்ள அகாதாக்கள் முடிவு செய்தனர். ஆனால், நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், கும்பமேளாவில் கடந்த வாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள், மடாதிபதிகள் கூடி புனித நீராடினர்.

கடந்த 14ம் தேதி மட்டும் ஹரித்துவாரில் 43 லட்சம் பக்தர்கள் வந்து புனித நீராடியதாக, உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது. உத்தரகாண்ட் சுகாதாரத்துறையினர், போலீஸார் என பலரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை வலியுறுத்தியும், பெரும்பாலானோர் கரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்காமலும், முக்ககவசம் அணியாமலும், சமூக விலகலைக் கடைபிடிக்காமலும் புனித நீராடினர் .

கடந்த 10ம் தேதி முதல் 15ம் தேதிவரை கும்பமேளாவுக்கு வந்திருந்த 2.35 லட்சம் பேருக்கு கரோனாபரிசோதனை செய்தது. இதில் முதல்கட்டமாக 2,171 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த பாதிப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் அச்சம் இருப்பதாக மாநில சுகாதாரத்துறையினர் எச்சரித்தனர்.

மேலும், மத்தியப்பிரதேச மகா நிர்வானி அஹாராவின் தலைவர் சுவாமி கபில் தேவ் கரோனா தொற்றால் கடந்த 13-ம் ேததி உயிரிழந்தார். கரோனா தடுப்பு விதிகளை மதிக்காமல் கும்பமேளாவுக்கு தொடர்ந்து பக்தர்கள் வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, 13 அகாராக்கள் ஒன்றான நிரஞ்சனி அகாதா, கும்பமேளாவை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. கும்ப மேளாவில் பங்கேற்ற பக்தர்கள் பலரும் தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் மும்பை மேயர் கிஷோரி பெட்நேகர் கூறியதாவது:

கும்பமேளாவுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு கரோனாபரிசோதனை செய்ததில் அவர்களில் பலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கும்ப மேளாவில் பங்கேற்ற பக்தர்கள் பலரும் தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

கும்ப மேளா சென்றவர்கள் தங்கள் சொந்த மாநிலம் திரும்பியவுடன் வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும், மக்களுக்கு கரோனாவை பிரசாதமாக கொடுத்து விடக்கூடாது. இந்த விஷயத்தில் பக்தர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x