

ரயிலில் பயணிக்கும் பயணிகள், ரயில் நிலையத்துக்குள் வருவோர் கண்டிப்பாக முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ரயில்வே சட்டத்தின்படி ரூ.500வரை வரை அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய சுகாதாரத்துறை வழங்கிய பல்வேறு கட்டுப்பாடுகளை முறைகளைப் பின்பற்றி இந்த அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2.34 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டனர், 1341 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து ரயில்வே வாரியம் புதியகட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.
இது குறித்து மத்திய ரயி்ல்வே துறை இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். 2020, மே 11ம் தேதி ரயில்வே கொண்டு வந்த நிலையான வழிகாட்டல் விதிகளின்படி, ரயில்களில் பயணிக்கும் பயணிகளும், ரயில்நிலையத்துக்குள் வரும் பயணிகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாமல் ரயில்நிலையத்துக்குள்வரும் பயணிகள், உடன் வருவோர், மற்றும் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ரயில்வே சட்டத்தின்படி ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
ரயில்களை அசுத்தப்படுத்துதல், ரயில்நிலையங்களில், ரயிலில் எச்சில் துப்புதல் தடை செய்யப்படுகிறது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முகக்கவசம் அணியாமல் பயணித்தல், முகக்கவசம் அணியாமல் ரயில்நிலையத்துக்குள் வருதல், எச்சில் துப்புதல் போன்றவை அடுத்தவர்கள் உயிருக்கும், பொது சுகாதாரத்துக்கும் ஆபத்தை விளைவிக்கும் செயலாகும்
ஆதலால் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு அடுத்த 6 மாதங்களுக்கும் அல்லது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.