Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; ஆக்ஸிஜன் இருப்பு பற்றி பிரதமர் மோடி ஆய்வு: 12 மாநிலங்களுக்கு 17 ஆயிரம் டன் வழங்க உத்தரவு

கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆக்ஸிஜன் கையிருப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

கரோனா தொற்றால் மோசமான பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்க மருத்துவ ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாக தகவல் வெளியானது.

இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடிதலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மருத்துவமனைகளில் இப்போது உள்ள ஆக்ஸிஜன் கையிருப்பு மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 12 மாநிலங்களில் அடுத்த 15 நாட்களுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு குறித்து இக்கூட்டத்தில் பிரதமர் மோடி விரிவாக கேட்டறிந்தார். இந்த மாநிலங்களுக்குட்பட்ட மாவட்ட அளவிலான நிலவரமும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். ஆக்ஸிஜன் டேங்கர் லாரிகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு தடையின்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆக்ஸிஜன் நிரப்பும் தொழிற்சாலைகள் 24மணி நேரமும் இயங்க அனுமதிவழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உருக்கு ஆலைகளில்இருப்பு வைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜனை மருத்துவமனைகளுக்கு வழங்குமாறும் உத்தரவிடப்பட் டுள்ளது. நைட்ரஜன் எரிவாயு எடுத்துச் செல்லும் டேங்கர் லாரிகளை சுத்தம் செய்து, அவற்றை ஆக்ஸிஜனை விநியோகம் செய்ய பயன்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், டெல்லி, சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் ஆகிய 12 மாநிலங்கள் கரோனாதொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அடையாளம் கண்டது. இந்த மாநிலங்களுக்கு வரும் 20-ம் தேதி 4,880டன், 25-ம் தேதி 5,619 டன், 30-ம்தேதி 6,593 டன் மருத்துவ ஆக்ஸிஜன் அனுப்பி வைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் 50 ஆயிரம் டன் ஆக்ஸிஜனை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு டெண்டர் கோர உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x